கடிமணப் படலம் - 1333
வானவர் முதலியோர் மலர் மழை பொழிதல்
1333.
வானவர் பூ மழை. மன்னவர் பொன் பூ.
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம்.
தான் நகு நாள்மலர். என்று இவைதம்மால்.
மீன் நகு வானின் விளங்கியது. இப் பார்.
வானவார் பூமழை- வானத்துத் தேவர் பொழிந்த (கற்பக) மலர்
மாரியும்; மன்னவர் பொன் பூ - மண்ணகத்து மன்னர்கள் பொழிந்த
பொன்னால் ஆகிய பூக்களும்; ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம்
- மற்றையோர் பொழிந்த விளங்கும் ஒளி முத்துக்களும்; தான் நகு
நாள் மலர் - தானாக மலர்ந்த பூக்களும்; என்று இவை தம்மால் -
என்று (கூறப்படும்) இவற்றால்;இப்பார் மீன் நகுவானின் விளங்கியது -
இம் மண்ணுலகம் (அன்று) மீன்கள் ஒளிர்கின்ற வான் உலகம் போல
விளங்கியது.
“என்ற” எனும் பெயர் எச்சத்தின் அகரம் தொக்கு “என்று” என
நின்றது. பெருமான். பிராட்டி திருமணத்தன்று. மண்ணுலகம்
விண்ணுலகமாயிலங்கியது எனக் கூறக் கருதிய கவிஞர்பிரான் அன்று
சொரிந்த பொருள்களை வைத்தே தன் நினைப்பை முடித்துக்
காட்டினார். பூக்களும் பொன்னும் முத்தும் எங்கும் மொய்த்துக்
கிடந்து மண்ணகத்தை வானகமாக்கிற்று என்பதாம். 88
