கடிமணப் படலம் - 1329

bookmark

திருமணச் சடங்கு தொடங்குதல்

1329.    

தண்டிலம் விரித்தனன்: தருப்பை சாத்தினன்;
மண்டலம் விதிமுறை வகுத்து. மென் மலர்
கொண்டு நெய் சொரிந்து. எரி குழும. மூட்டினன்;
பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன்.
 
தண்டிலம்     விரித்தனன்-  (வசிட்ட  மாமுனிவன்)   (அக்கினி
வளர்க்கும்   இடத்தே  பரப்ப  வேண்டிய)   மணலைப்   பரப்பினான்;
தருப்பை  சாத்தினன் - தருப்பைகளை உரிய இடங்களில்  வைத்தான்;
மண்டலம்  விதிமுறை வகுத்து - (அக்கினி வைத்தற்குரிய) வட்டமான
இடத்தை  வேத  விதிப்படி  ஏற்படுத்தி;  மென்மலர்  கொண்டு நெய்
சொரிந்து  எரிகுழும  மூட்டினான் - மெல்லிய மலர்களைக் கொண்டு
நெய்யை   ஆகுதியாகச்  சொரிந்து  ஓம   அக்கினி   குவிந்தெழுமாறு
செய்தான்; பண்டு உள  மறை  நெறி பரவிச் செய்தனன் - தொன்று
தொட்டு  வந்த  வேத  நெறிப்படி  (மந்திரங்களால்)  தொழுது.  (மணச்
சடங்கினைச்) செய்தான்.

தண்டிலம்:   மணல்;வடசொல். “அக்கினியைப் பிரதிட்டிக்குமிடத்தே
சதுரமாகப்    பரப்புகின்ற    மணல்”    (சீவக.    2463)     என்பர்
நச்சினார்க்கினயர்    “தருமணல்.    தருப்பை     ஆர்ந்த    சமிதை
இம்மூன்றினானும்  விரிமலர்  அணிந்த கோல  வேதிகை”  (சீவக. 2463)
என்பார் தேவரும்.                                          84