கடிமணப் படலம் - 1316
1316.
நூல் வரும் தகையன. நுனிக்கும் நோன்மைய.
சால் பெருஞ் செவ்விய. தருமம் ஆதிய
நாலையும் அனையன. புரவி நான்கு. ஒரு
பாலமை உணர்ந்தவன் பக்கம் பூண்டவே.*
நூல் வருந் தகையன- அசுவ சாத்திரத்தில் கூறப்படும் உத்தம
இலக்கணங்களை உடையவையும்; நுனிக்கும் நோன்மைய - கூர்ந்து
உணர்தற்கேற்ற ஆற்றலையுடையவையும்; சால் பெரும் செவ்விய -
நிரம்பிய பேரழகுடையவையும்;தருமம் ஆதிய நாலையும் அனையன -
அறம். பொருள். இன்பம். வீடு என்னும் நால்வகைப்
புருடார்த்தங்களைப் போன்று யாவராலும் அடைய விரும்பப்படுபவையும்
ஆகிய; புரவி நான்கு ஒரு பாலமை உணர்ந்தவன் பக்கம்
பூண்டவே - நான்கு குதிரைகள் உயிர்களின் ஒப்பற்ற உள்ளத்தின்
தன்மையை உணரவல்லவனாகிய இராம பிரானுடைய தேரில்
பூட்டப்பெற்றுள்ளன.
பாலமை: பான்மை: தன்மை. அறம். பொருள். இன்பம். வீடு எனும்
புருடார்த்தங்கள் நான்கின் பயிற்சியும் உயர்நிலை எய்தும் ஆன்மக்
கூட்டத்திற்கு இலக்கையடைய உதவுவதுபோல. உரிய இலக்கை
எளிதில் அடைய பயிற்சிமிக்க இக்குதிரைகள் நான்கும் உதவும்
என்பதாம். 71
