கடிமணப் படலம் - 1306

bookmark

உதரபந்தனத் தோற்றம்

1306.    

சுற்றும் நீள் தமனியச் சோதி பொங்க. மேல்
ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம்.
மற்றும் ஓர் அண்டமும். அயனும். வந்து எழ.
பொன் தடந் தாமரை பூத்த போன்றதே.
 
சுற்றும் நீள்தமனியச் சோதி பொங்க- சுற்றுப்புறங்களில் எல்லாம்
நீண்டு  பொன்   மயமான ஒளி பரவ; மேல்  ஒற்றை மாமணி உமிழ்
உதர பந்தனம் - மேலே   ஒற்றையாகப்  பெரிய  மாணிக்கம்  ஒன்றை
ஒளிவிளங்கப் பதித்த  உதர  பந்தனம்   எனத்   திருவயிற்றின்  மேல்
இட்ட  அணியானது; மற்றும்  ஓர் அண்டமும் அயனும் வந்து எழ -
(இப்பொழுதுள்ள    அண்டங்களேயன்றி)    வேறும்  ஓர்  அண்டமும்.
அதனைப்  படைக்கும்   பிரமனும்   வந்து   தோன்றும்படி;   பொன்
தடந்தாமரை பூத்த போன்றதே - பொன்நிறமான பெரிய தாமரை மலர்
ஒன்றைத் திருநாபி பூத்ததைப் போன்றிருந்தது.

அரை   ஆடை  நழுவாமல்  வயிற்றின் மீது அணியும் அணி உதர
பந்தனம்  ஆகும்.  இராமன்  அவ்வணியை   அணிந்தது  இன்னுமோர்
அண்டத்தையும்  இன்னுமோர்  பிரமனையும்   படைக்கக்   கருதி. தன்
நாபியில்  மேலும் ஒருகமலத்தைப் பூத்தது  போன்றிருந்தது  எனத் தன்
குறிப்பை   ஏற்றிக்   கூறினார்.  உதர   பந்தனத்தைச்   சுற்றியெழுந்த
பொன்மயமான  ஒளி  வெள்ளத்தை  அண்ட   கோளமாகவும்.  உந்தித்
தாமரை.   உதர  பந்தத்தின்  முகப்பாகவும்   அவ்வணியின்   நடுவில்
திகழும்  மணியைப்   பிரமனாகவும்  கொள்க.  திருமால்  தன்  நாபிக்
கமலத்தில்   பிரமனைப்   படைக்கின்றான்;   அவன்   பொன்மயமான
அண்டங்களைப் படைக்கின்றான் என்பது நூற் கொள்கை.           61