கடிமணப் படலம் - 1290

bookmark

மண்டபம் மாலின் வயிற்றை ஒத்தல்

1290.    

எண் தவ முனிவரும். இறைவர் யாவரும்.
அண்டரும். பிறரும். புக்கு அடங்கிற்று; ஆதலால்.
மண்டபம் வையமும் வானும் வாய்மடுத்து
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே.*
 
எண்தவ   முனிவரும்  இறைவர்  யாவரும்-    (அனைவராலும்)
மதிக்கத்தக்க  (வசிட்டன்.   விசுவாமித்திரன்   முதலிய)  முனிவர்களும்.
(தசரதன்.  சனகன்  முதலிய)  அனைத்து   மன்னர்களும்;  அண்டரும்
பிறரும் புக்கு அடங்கிற்று - தேவர்களும் மற்றையோரும் வந்தடையப்
பெற்று  (இவர்  அனைவரையும்)   தன்னுள்  அடக்கி   வைத்திருந்தது
(அம்    மணிமண்டபம்);    ஆதலின்   மண்டபம்   -   ஆதலால்
அம்மண்டபமானது; வையமும்  வானும்  வாய்மடுத்து  உண்டவன்-
மண்ணையும்  விண்ணையும்  (யுக முடிவுக் காலத்தில்) தன்  திருவாயில்
இட்டு   உட்கொண்டருளுபவனான   திருமாலினுடைய;  அணி  மணி
உதரம் ஒத்தது - நீல மணியின் நிறமுடைய அழகிய  திருவயிற்றினைப்
போன்றதாயிற்று.

மேல்     அணி  மண்டபத்தை   அயன்  படைத்த அண்டமாக்கிக்
காட்டியவர்   இப்பாடலில்.   அயனையும்    படைத்த    பெருமானின்
திருவயிறு ஆக்கிக் காட்டுகிறார். “ஒரு பகல் உலகு  எலாம்  உரைத்துள்
பொதிந்து.  அருமறைக்கு  உணர்வரும்  அவன்”  (கம்ப. 282)  என்னும்
“வையம்  முற்றும்  வயிற்றின்  அடக்கி  ஐயன்”  (கம்ப. 1082)  என்றும்
முன்பும்    உரைப்பர்.    அண்டங்கள்    யாவையும்    உண்டடக்கும்
திருவயிற்றான்     என்பதையுணர்த்த.      அவற்றின்     காரணமான
ஐம்பூதங்களுள்   முதலும் இறுதியுமாகிய  வையத்தையும்  வானத்தையும்
கூறினார். இடையிலுள்ளவை தானே இவற்றுள் அடங்குமாதலின்.     46