கடிமணப் படலம் - 1254
தேவியின் வருத்த மிகுதி
1254.
‘பண்ணோ ஒழியா; பகலோ புகுதாது;
எண்ணோ தவிரா; இரவோ விடியாது;
உள் நோவு ஒழியா; உயிரோ அகலா;
கண்ணோ துயிலா; இதுவோ கடனே?
பண்ணோ ஒழியா- (நகரின்) இசைகளோ அடங்குவதாக இல்லை;
பகலோ புகுதாது - பகற்பொழுதோ வந்தடைவதாக இல்லை; எண்ணோ
தவிரா - (இராமனைப் பற்றிய) எண்ணங்களோ நீங்குவதாக இல்லை;
இரவோ விடியாது - (இந்தக் கொடிய) இரவுப் பொழுதோ விடிவதாக
இல்லை; உள் நோவு ஒழியா - (என்) உள்ளத்துத் துன்பங்களோ
ஒழிவதாக இல்லை; உயிரோ அகலா - என் உயிரும்
உடம்பை விட்டு அகலுவதாகவும் இல்லை; கண்ணோ துயிலா - என்
கண்களும் உறங்குவதாகவும் இல்லை; இதுவோ கடனே? - இங்ஙனம்
வருந்தித் தவிப்பதோ பெண்ணாய்ப் பிறந்த எனது கடமையானது?
“உயிரோ அகலாது” எனற்பாலது - “உயிரோ அகலா” என வந்தது
செய்யுள் ஆதலின் வந்த ஒருமை பன்மை மயக்கம். துயரங்கள்
அடுக்கடுக்காக வருவதைப் போல் வாக்கியங்களையும் அடுக்கடுக்காக
அடுக்கிக் காட்டுகிறார். “பஞ்சப்பிராணன்” என்பதனால் “உயிரோ
ஒழியா” எனப் பன்மையால் கூறினார் எனவுமாம். 10
