கடிமணப் படலம் - 1251
தென்றலிடம் கூறல்
1251.
‘மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய்.
மின் தொத்து. நிலா நகை. வீழ் மலயக்
குன்றில். குல மா முழையில். குடிவாழ்
தென்றற் புலியே! இரை தேடுதியோ?
வீழ்மலயக் குன்றில் குலமா முழையில் குடிவாழ் தென்றல்
புலியே! - விரும்பப்படும் தென்பொதிகை மலையில் உள்ள சிறந்த
பெரிய குகைகளைக் குடியிருப்பாகக் கொண்ட தென்றல் எனும்புலியே;
மன்றல் குளிர் வாசம்- நறுமணத்திற்கும் குளிர்ச்சிக்கும் இடமான நீ;
வயங்கு அனல் வாய் - நெருப்புக்கக்கும் வாயினைக்கொண்டு;
மின்தொத்து நிலாநகை - ஒளியுடைய நிலாக்கற்றைகளைப் பற்களாக்கி;
இரை தேடுதியோ? - (என்போன்று பிரிந்து வாடும் பெண்டிரின்
உயிரை) இரையாகத் தேடிப் புறப்பட்டு விட்டாயோ?.
பிரிந்தார்க்குத் துயர்தந்து விழுங்குமாதலின். தென்றலும்
புலியாயிற்று; அதன் குளிர்மணம் அனலாக ஆயிற்று. நிலாக்கற்றை
பற்களாயிற்று. அதன் மெது நடை பாய்ச்சலாயிற்று; அதன் உலாவல்
இரைதேடுதல் ஆயிற்று. மணக்கும்போது. குளிர்ச்சியும் நறுமணமும்
உடைய உன் வாய். பிரிந்திருக்கும் இப்போது. “வயங்கு அனல் வாய்”
ஆயிற்றே என்று இரங்குகின்றாள். மன்றல் - மணம். மெல்லிய
தென்றலை. கவி. தன் சொல் ஆற்றலால் வலிய புலியாக்கிக் காட்டும்
திறம் காண்க. 7
