கடவுள் வணக்கம்

bookmark

     வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
     கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
     சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
     முன்னி யவைமுடிக என்று.

     (இ-ள்) வான் இடு வில்லின் - மேகத்தில் உண்டாகிய இந்திரவில்லைப் போன்ற, வரவு அறியா - (உடம்பின்) தோற்றத்தை அறிந்து, வாய்மையால் - சத்தியத்தினால், கால் நிலம் தேயா - பாதம் பூமியிற் படியாத, கடவுளை - தேவனை, எம் உள்ளத்து - எமது மனதில், முன்னியவை முடிக என்று - நினைத்த காரியங்கள் கைகூட வேண்டுமென்று சொல்லி, யாம் - நாம், நிலம் சென்னி உற - தரையில் தலை பொருந்தும்படி, வணங்கி சேர்தும் - தெண்டமிட்டுச் சேர்வோம். எ-று.

     வானத்தில் தோன்றுகின்ற வில்லானது இப்போதென்றும் இன்னபடியென்றும் தெரியாமல் உண்டாகி உரு அழிந்து போவது போல் உடம்பும் அழிந்து போவதனால் அது அழியா முன்னமே நினைத்த காரியங்கள் கைகூடும்படி கடவுளை நாம் பணிந்து சேர்வோம் என்பது கருத்து.

     கால் நிலத் தோயாமைக்குக் காரணம் வாய்மை. தேவதைகளின் பாதம் பூமியிற் படியாதென்று சாஸ்திரஞ் சொல்லும். இங்கு கடவுளை என்பது அருகனை. இக்காப்பு பதுமனார் செய்ததென்பர்.

     இடு - வினைத்தொகை. வில்லின் - இன் உருபு ஒப்புப் பொருளில் வந்தது. அறியா - செய்யா என்னும் வினையெச்சம். முன்னியவை - வினையாலணையும் பெயர், முன்னு - பகுதி, இ - இன் இடைநிலையின் ஈறு குறைந்தது, அ - சாரியை, வை - விகுதி. என்று - சொல்லெச்சம். சேர்தும் - தனித் தன்மைப்பன்மை வினைமுற்று; உயர்வினால் வந்தது பன்மை. முடிக - வேண்டிக் கோடலில் வந்த வியங்கோள்.