கங்கைப் படலம் - 2082
2082.
திருஉளம்எனின், மற்று என்
சேனையும் உடனே கொண்டு,
ஒருவலென் ஒருபோதும்
உறைகுவென்; உளர் ஆனார்
மருவலர்எனின், முன்னே
மாள்குவென்; வசை இல்லேன்;
பொரு அரு மணி மார்பா!
போதுவென், உடன்’ என்றான்.
‘பொரு அரு மணி மார்பா! - ஒப்பற்ற அழகிய மார்பினை
உடையவனே!; திரு உளம்எனின் - உன் மனத்திற்கு உடன்பாடாக
இருக்குமானால்; மற்று என் சேனையும் உடனே கொண்டு- நான்
வருவதோடு அல்லாமல் என்னுடைய சேனைகளையும் கூட அழைத்துக்
கொண்டு; ஒருபோதும்-எல்லாக் காலத்தும்; ஒருவலென்- நீங்காதவனாய்;
உறைகுவென் - உன்னுடனேதங்குவேன்; மருவலர் உளர் ஆனார்
எனின் - தீங்கு செய்யும் பகைவர்கள் யாரேனும்வருவார்கள் ஆயின்;
முன்னே மாள்குவென் - உனக்கு முன்னே அவர்களுடன் போர்செய்து
(அவர்களை அழித்து) நானும் இறந்துபடுவேன்; வசை இல்லேன் -
(அடைக்கலம் புகுந்தவரைமாற்றானிடம் காட்டிக் கொடுத்தான் என்ற) பழிச்
சொல்லுக்கு ஆளாகமாட்டேன்; உடன்போதுவென் என்றான் -
உன்னுடனேயே வருவேன் என்று கூறினான்.
‘மற்று’ வினைமாற்று. நான் வருதல் அன்றிச் சேனையும் உடன்
கொண்டு வருவேன் எனப் பொருள் படுதலின். மருவலரை அழித்து
மாள்தலும் அழியாது முன்னே மாளுதலும்வகைக்கு இடனாகாமை
உணர்க. 41
