கங்கைப் படலம் - 2067

bookmark

இராமன் குகனை விரைவில் நாவாய் கொணர்க எனல

2067.    

நாள் முதற்கு அமைந்த யாவும்
     நயந்தனன் இயற்றி, நாமத்
தோள் முதற்கு அமைந்த வில்லான்,
     மறையவர் தொடரப் போனான்,
ஆள் முதற்கு அமைந்த கேண்மை
     அன்பனை நோக்கி, ‘ஐய!
கோள் முதற்கு அமைந்த நாவாய்
     கொணருதி விரைவின்’ என்றான்.

     நாமத் தோள் முதற்கு அமைந்த வில்லான் - அச்சந்தரும்
தோளிடத்திற்குப்பொருந்திய வில்லை உடைய இராமன்;  நாள் முதற்கு
அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி -வைகறைக் காலத்தில் செய்ய
வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் விரும்பிச் செய்து;  மறையவர்
தொடரப் போனான் - வேதியர்கள் தன்னைத் தொடர்ந்து வரச்
செல்கின்றவன்; ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பினை நோக்கி-
அடிமைத்தன்மைக்குப் பொருந்தியநட்புரிமை உடைய அன்புள்ளம் கொண்ட
குகனைப் பார்த்து;  ‘ஐய! - ஐயனே;  கோள்முதற்கு அமைந்த நாவாய் -
கொண்டு செல்லுதற்குரிய தரம் வாய்ந்த மரக்கலங்களை; விரைவின்
கொண்ருதி’ - விரைவாகக் கொண்டு வருவாயாக;’  என்றான் -.

     தோள் முதல் - முதல் - இடம் என்னும் பொதுப் பொருள். நாள்
முதல் வைகறையில்தொடங்குமாதலின் வைகறை யென்றாம் - அது
காலைச்சந்தி நிகழ்த்துதற்கு உரிய பொழுதுஆகலின்.                 26