கங்கைப் படலம் - 2048

bookmark

2048.    

பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன்,
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்,
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான்.

     பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி - பனைமரத்தினது
வலிய சிறாம்பு போலவிளங்கி நெருங்கியுள்ள;  வண்ண வன் மயிர் -
கருநிறம் படைத்த வலிய மயிர்கள்; வார்ந்து உயர் முன் கையன் - நீண்டு
ஒழுகப்பெற்றுள்ள முன்கையை உடையவன்; கண் அகன்தடமார்பு எனும்
கல்லினன் - இடமகன்ற விசாலமான மார்பு என்கின்ற கல்லினை
உடையவன்;  என்ணெய் உண்ட இருள்புரை மேனியன் - எண்ணெய்
பூசப் பெற்ற இருளை ஒத்த கரிய பளபளப்பானஉடம்பை உடையவன்.

     பனஞ்செறும்பு கருமைக்கும், மேல் குத்தி நிற்கும் தன்மைக்கும்,
முன்கை மயிர்க்கும்உவமையாம். “இரும்பனஞ் செறும்பின் அன்ன பரூஉ
மயிர்” “பனஞ் செறும்பு அன்ன பன் மயிர்முன்கை” என்பனவற்றை
நோக்குக.                                                     6