கங்கைப் படலம் - 2040
கங்கையின் பேறு
2040.
செய்ய தாமரைத் தாள் பண்டு தீண்டலால்
வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள்
ஐயன் மேனி எலாம் அளைந்தாள், இனி,
வையம் மா நரகத்திடை வைகுமே?
செய்ய தாமரைத் தாள் பண்டு தீண்டலால் - சிவந்த செந்தாமரை
போலும்திருமாலின் (இராமனின்) திருவடிகள் பண்டு தொடப்பெறுதலால்;
வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள் - உலகோரது கொடிய பாவங்களை
எல்லாம் போக்கி விளங்குபவனாகிய கங்கை; (இப்போது இராமனாகிய
திருமால் நீராடலால்) ஐயன் மேனி எல்லாம் அளைந்தாள் -இராமனது
திருமேனி முழுதும் தீண்டப் பெற்றவளாக ஆனாள்; இனி - இனிமேல்;
வையம்- கங்கையில் முழுகும் இவ் உலகம்; மா நரகத்திடை வைகுமே -
கொடிய நரகத்திடத்துத் தங்கமோ (தங்காது).
திருவடி பட்டது திருவிக்கிரமன் ஆனபோது. திருவடி அளவிலேயே
கொடிய பாவங்களைப்போக்குபவன் இப்போது திருமேனி முழுதும்
பட்டபடியால் வையத்தை நரகத்திலிருந்து நீக்குவாள்என்பது சொல்லவும்
வேண்டுமோ என்றவாறாம். 25
