கங்கைப் படலம் - 2030
தவச்செல்வர் இராமனை நீராடி அமுதுசெய்க எனல்
நாட் கடன் செய்து அமுதுண்ண முனிவர் இராமனை வேண்டுதல்
2030.
காயும், கானில் கிழங்கும், கனிகளும்,
தூய தேடிக் கொணர்ந்தனர்; ‘தோன்றல்! நீ
ஆய கங்கை அரும் புனல் ஆடினை,
தீயை ஓம்பினை, செய் அமுது’ என்றனர்.
(அம் முனிவர்கள்), கானில் - காட்டிலிருந்து; காயும் கிழங்கும்
கனிகளும் தூயதேடிக் கொணர்ந்தனர் - காய், கிழங்கு, பழம்
ஆகியவற்றைத் தூயவையாய்த் தேடிக் கொண்டுவந்தவர்களாய்; (இராமனை
நோக்கி) ‘தோன்றல்! - யாவரினும் சிறந்து விளங்குபவனே!; நீ-; ஆய
கங்கை அரும் புனல் ஆடினை - அப்படிப்பட்டகங்கையின் அரிய நீரில்
முழுகியவனாய்; தீயை ஒம்பினை - எரியை வளர்த்து (வழிபாடு)முடித்து;
அமுது செய் - உண்பாயாக;’ என்றனர் - என்று சொன்னார்கள்.
தோன்றல் - பிறர் அறியுமாறு புகழுடன் விளங்கலாம். ஆய கங்கை -
தூயதாகிய கங்கைஎன்றவாறு. நீராடி, எரியோம்பி, அமுது செய்தல்
நித்திய கரும நெறியாம். 15
