கங்கைப் படலம் - 2025

bookmark

கங்கைக் கரையில் உள்ள தவச்செல்வர்
இராமனைக் காண வருதல்

2025.    

கங்கை என்னும் கடவுள் திரு நதி
தங்கி வைகும் தபோதனர் யாவரும்,
‘எங்கள் செல் கதி வந்தது’ என்று ஏமுறா,
அம் கண் நாயகற் காண, வந்து அண்மினார்.

     கங்கை என்னும் கடவுள் திருநதி - கங்கை என்று சொல்லப்படும்
தெய்வத்தன்மைஉடைய அழகிய ஆற்றின் கரையில்;  தங்கி வைகும்
தபோதனர் யாவரும் - தங்கிஇருக்கின்ற முனிவர்கள் எல்லாரும்; ‘எங்கள்
செல் கதி வந்தது’ என்று ஏமுறா - எங்கள்மோட்ச மாகிய செல்லும்
பேறு எதிர்ப்பட்டது என்று மனத்தின்கண் இன்பம் அடைந்து; அம்கண்
நாயகன் காண- அருளுடைய கண்களை உடைய இராமனைக் காண்பதற்கு;
வந்து அண்மினார் -வந்து அணுகினார்கள்.

     பரம்பொருளே இராமனாக அவதரித்துள்ளமை உணர்ந்தவர் ஆதலின்,
‘எங்கள் செல்கதி வந்தது’என்று முனிவரர் இன்புற்றனர் என்க. கண்ணுக்கு
அழகு,  அருளாதலின் ‘அம்’- அழகு எனப்பொருள்கொண்டது.         10