கங்கைப் படலம் - 2024
இராமன் முதலியோர் கங்கைக்கரையை அடைதல்
மூவரும் கங்கைக் கரை அடைய முனிவர்கள் காண வருதல்
கலிவிருத்தம்
2024.
பருதி பற்றிய பல் கலன் முற்றினர்,
மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ.
சுருதி கற்று உயர் தோமிலர் சுற்றுறும்
விரி திரைப் புனல் கங்கையை மேவினார்.
பருதி பற்றிய - சூரியனைப் போன்ற ஒளிபடைத்த; பல்கலன் - பல
அணிகலன்களை; முற்றினர் - நிறைய அணிந்துள்ள மூவரும்; மருத
வைப்பின் - வயல்நிலங்களாகிய செல்வமுடைய; வளம் கெழு நாடு
ஒரீஇ - வளம் பொருந்திய நாடு கடந்து சென்று; சுருதி கற்று உயர் -
வேதங்களை (இடையறாது) கற்று உயர்ந்த; தோம் இலர்- குற்றம் இல்லாத
முனிவரர்; சுற்றுறும் - எப்பொழுதும் சுற்றி இருக்கப் பெற்ற; விரி
திரைப்புனல் கங்கையை - விரிந்த அலைகளையுடைய நீர் நிரம்பிய
கங்கையாற்றை; மேவினார் - அடைந்தார்.
தாம் செய்ய வேண்டிய விரத நியமங்களைச் செய்துகொண்டு,
இணையாகத் தங்குதற்கு ஏற்றஇடம் ஆதலாலும், தன்னை அடைந்தாரது
பாவத்தைப் போக்குதலானும் முனிவரர் கங்கையைச் சுற்றித்தங்கித் தவம்
செய்வாராயினர். 9
