கங்கை காண் படலம் - 2439

bookmark

யானைகள் கங்கையை நீந்திக் கடத்தல்

இடிபடு முழக்கம் பொங்க,
     இன மழை மகர நீரை
முடிவு உற முகப்ப, ஊழி
     இறுதியின் மொய்ப்ப போலக்
கொடியோடு வங்கம் வேலை
     கூம்பொடு படர்வ போல
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின,
     நெடுங் கை வேழம்.

     இன மழை - கூட்டமான மேகங்கள்; இடிபடு முழக்கம் பொங்க -
ஒன்றுடன் ஒன்றுமோதுவதால் உண்டாகிய முழக்க ஒலி அதிகரிப்ப; ஊழி
இறுதியின் - யுகப்பிரளயகாலத்தே;  மகர நீரை - கடல் நீரை; முடிவுஉற
முகப்ப - அடியோடு வற்றும்படிமொண்டு உண்பதற்காக; மொய்ப்ப
போல - நெருங்கி யுள்ளவை போலவும்;  கொடியோடுவங்கம் -
கொடியோடு கூடிய கப்பல்; வேலை - கடலின்கண்;  கூம்பொடு -
பாய்மரத்தோடு; படர்வ போல - செல்வன போலவும்; நெடுங்கை வேழம் -
நீண்டதுதிக்கையை உடைய யானைகள்; நெடிய கை எடுத்து நீட்டி -
தமது நீண்ட துதிக்கையை உயரத்தூக்கி; நீந்தின- (கங்கையில்) நீந்திச்
சென்றன.

     மகரம் என்பது கறாவைக் குறிக்கும். அதனை உடைய நீர் எனவே
கடல் ஆயிற்று. கங்கையில் நீந்திச் செல்லும் யானைகளுக்கு இரண்டு
உவமைகள் கூறினார் - ஊழிக்காலத்து மேகங்கள் ஒன்றாய்க் கடல்நீரை
வற்றக் குடிப்பன போலவும், கப்பல் பாய்மரத்துடன் கடலில் செல்வது
போலவும் என.