ஒன்பதாம் அத்யாயம்
( மண வாழ்வும் சாஸ்திரம் கூறும் எட்டு வகைத் திருமண முறைகள், திருமணத்தின் போது அளிக்கப்படும் வரதட்சணை மற்றும் பரிசுகள் பற்றி அர்த்தசாஸ்திரம் கூறும் விளக்கங்கள், திருமண ஒப்பந்தங்களை ரத்து செய்யவதர்க்கான விதிகள், மணமுடிப்பதில் மகளுக்குள்ள உரிமை, திருமணத்தில் முழுமை அடைவதற்கான விதிமுறைகளும், மண வாழ்விற்கு உரிய கடமைகளும், மனைவி மற்றும் விதவைகளின் முழுமையான சொத்துரிமைக்கான சட்ட திட்டங்கள், மண முறிவில் ஒரு பெண்ணுக்கான உரிமைகள் மற்றும் அர்த்தசாஸ்திரத்தில் உள்ள மௌர்ய காலத்து விவாகரத்து சட்ட திட்டங்கள் , திருமண வாழ்வில் மேற்கண்ட சட்டங்களை மீறும் பொழுது அளிக்கப்படும் அதற்குரிய தண்டனைகள் மற்றும் அதன் விதங்கள் )
மண வாழ்வும் சாஸ்திரம் கூறும் எட்டு வகைத் திருமண முறைகள்
திருமண பந்தம் தான் ஒரு ஆண் அல்லது பெண்ணின் வாழ்க்கையை இணைத்து முழுமை அடையச் செய்கிறது. எனவே , இந்தத் திருமண பந்தம் தான் ஒருவர் வாழ்க்கையில் முக்கிய கட்டமாகும். இந்து சமூகத் திருமணங்களின் பொதுவான விதிமுறை திருமணம் செய்து கொள்கிற ஆணும், பெண்ணும் ஒரே குலத்தைச் சார்ந்தவராயிருக்க வேண்டும் என்பதே (அதே சமயத்தில் ஒரே கோத்திரமாக இருத்தல் கூடாது). பொதுவாக அர்த்தசாஸ்திரத்தில் எட்டு வகையான திருமண பந்தங்கள் விளக்கப்பட்டு உள்ளது. அவை பின்வருமாறு :
1. ப்ரமா : நன்கு அலங்கரிக்கப்பட்ட மகளை ஒரு தந்தை திருமணம் செய்து கொடுத்தல்
2. ப்ரஜாபத்யா : பெண்ணின் தந்தையிடம் சம்மதம் பெறாமல் பெண்ணும் , ஆணும் புனிதச் சடங்குடன் மனம் செய்து கொள்ளுதல்.
3. ஆர்ஷா: கணவன் தன் மனைவியின் தந்தைக்கு இரண்டு பசுக்களைக் கொடுத்து, அதன் மூலம் நடந்த திருமணத்தை முறைப்படுத்திக் கொள்ளுதல் .
4. தைவா: பலிபீடத்தின் குருவாய் செயலாற்றுபவருக்குப் பெண்ணைக் கொடுத்தல்.
5. காந்தர்வ: இரகசியமாய் காதல் திருமணம் செய்து கொள்ளுதல்.
6. ஆசுரா: ஏதேனும் பரிசுக்குப் பதிலாய் பெண்ணை அளித்தல்
7. ராட்சஸா : திருமணம் செய்யும் பொருட்டு பெண்ணை வலுக்கட்டாயமாய் கடத்திச் செல்லுதல்.
8. பைசாஸ : ஒரு பெண்ணை உறங்கிய நிலையில் அல்லது மயங்கிய நிலையில் கவர்ந்து செல்லுதல்.
பெண்ணின் தந்தை சம்மதத்தோடு நடைபெறும் முதல் நான்கு வகைத் திருமணங்கள் சட்டத்துக்கு உட்பட்டவை. மற்றவை பெண்ணின் பெற்றோர் ஒப்புக் கொண்டால் மட்டுமே சட்ட பூர்வமானதாகும். கலப்பினங்களைச் சார்ந்தவர்கள் அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்ளலாம், அதில் தவறில்லை.
திருமணத்தின் போது அளிக்கப்படும் வரதட்சணை மற்றும் பரிசுகள் பற்றி அர்த்தசாஸ்திரம் கூறும் விளக்கங்கள்
சம்மதத்தைக் கொடுப்பதற்காக வழங்கப்படும் வரதட்சணை தந்தையாய் இருவருக்கும் அல்லது ஒருவர் இல்லாத நிலையில் மற்றொருவருக்கும் சென்று சேரும்.
( பெற்றோர்கள் நமது இந்து சாஸ்திரத்தைப் பொருத்தவரை ஒரு முறை மட்டுமே வரதட்சணையைப் பெறலாம். வற்புறுத்தி பெறப்படும் வரதட்சணை திருட்டுக்கு சமானம். மறுமணத்தின் மூலம் பெறப்படுகிற இரண்டாம் வரதட்சணை முதல் மனைவியைச் சேரும்) அனைத்து வகைத் திருமணங்களிலும் பெண்ணைத் திருப்திப்படுத்துவதர்க்காக வழங்கப்படும் பரிசுகள் தவிர்க்கப்படுவதில்லை.
திருமண ஒப்பந்தங்களை ரத்து செய்யவதர்க்கான விதிகள்
உயர் குலங்களைப் பொறுத்தவரை திருமண ஒப்பந்தம் என்பது பாணிக்கிரகணம் எனப்படும் ( பாணிக்கிரகணம் என்பது பெண்ணை பெற்ற தந்தை, அவளது கையை பிடித்தவாறு மாப்பிளையிடம் திருமணத்தின் பொழுது ஊர் அறிய, உலகம் அறிய ஒப்படைப்பார்). இதில் மணமகன் - மணமகள் இருவரில் யாரிடம் பால் சார்ந்த குறைபாடு ( sexual defect) இருந்தாலும் திருமணத்தை ரத்து செய்ய முடியும். உயர்குடி தவிர , மற்ற ஜாதிகளைப் பொருத்தவரை மணமக்கள் உடல் உறவு கொண்டு திருமணத்தை முழுமையாக்கும் வரை இடையில் எந்த நேரத்திலும் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் . ஓர் ஆணின் மூலம் பெண் கருவுற்ற நிலையில் அவர்களுக்கு இடையேயான திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்ய இயலாது.
திருமண உடன்படிக்கையில் வஞ்சம் : பெண்ணின் பாலியல் ரீதியான குறைபாட்டை மறைத்துத் திருமணம் செய்வது தண்டிக்கத்தக்க குற்றமாகும். அதே போல மணமகனின் குறைபாட்டை மறைப்பது இருமடங்கு அபராதம் மற்றும் தண்டனைக் குரியதாகும். ஏற்கனவே ஒருவரை மணந்த பெண்ணை, மற்றொருவருக்குத் திருமணம் செய்ய முயற்சிப்பது குற்றமாகும். ஆனால், அப்பெண் மறுத்தால் எனில் அத் திருமணம் செல்லத்தக்கதாகிவிடும் . அது போல , ஒரு பெண்ணைக் காட்டி திருமண நேரத்தில் வேறொரு பெண்ணை மாற்றி மணம் செய்து கொடுக்க முயல்வதும் குற்றமே.
மணமுடிப்பதில் மகளுக்குள்ள உரிமை
( ஒரு பெண் பருவம் எய்திய மூன்று வருடத்திற்குள் அவளுக்குத் திருமணம் செய்து வைப்பது தந்தையின் கடமையாகும்) பருவம் எய்திய மூன்று வருடத்திற்குப் பிறகும் கன்னியாகவே திகழும் ஒரு பெண் தன் தந்தை அளித்த எந்த நகையையும் ஏற்காது தான் விரும்பியவரை ( ஒரே குலம் அல்லது வேற்று குலம்) மணம் முடித்தல் குற்றம் அன்று.
திருமணத்தில் முழுமை அடைவதற்கான விதிமுறைகளும், மண வாழ்விற்கு உரிய கடமைகளும்
பெண் பன்னிரண்டு வயதிலும் , ஆண் பதினாறு வயதிலும் மணம் முடித்ததற்கான பக்குவம் அடைகிறார்கள். தந்தை திருமண ஏற்பாடு செய்யாதிருப்பதும், நிச்சயம் செய்த திருமணத்தைத் தள்ளிப் போடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். நிச்சயம் செய்யப்பட நாளில் இருந்து பெண்ணுக்கு ஏழு மாத விலக்குகள் கடந்திருப்பின் , அவளுடன் உறவு வைத்துக் கொள்ள மணமகனுக்கு உரிமை உண்டு .
திருமணம் நடந்தேறும் காலத்தில் பெண் கன்னித் தன்மை உடையவளாயிருக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் வரதட்சணை, திருமணச் செலவு மற்றும் அபராதத்தை அவள் செலுத்தியாக வேண்டும். கன்னித்தன்மை உடையவள் போல் நடித்து ( கன்னித் திரை கழிந்ததற்கு அடையாளமாய் வேறு இரத்தத்தைக் காட்டுவது) ஏமாற்ற முயல்வதும் தண்டனைக்கு உரிய குற்றமாகும்.
ஒரு பெண் கன்னியல்ல என்று எந்த ஆணும் பொய்க் குற்றம் சாட்ட முடியாது. அப்படிச் செய்பவன் அந்தப் பெண்ணை மணக்கும் தகுதியை இழப்பதோடு, வரதட்சணை மற்றும் திருமணச் செலவுகளைத் திரும்பப் பெற இயலாது.
மண வாழ்விற்கு உரிய கடமைகள் : கீழ்க்கண்ட நிலையில் தன் மனைவியின் சம்மதம் இல்லாமல் ஒரு கணவன் அவளுடன் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது.
1. அவனுக்கு முன்பே மகன்கள் இருப்பின்
2. அவள் பக்தி மார்கத்தில் செல்ல விரும்புவாள் எனில்
3. அவள் மலடியாயிருப்பின்
4. பிரசவத்தில் இறந்த குழந்தைப் பெற்று இருப்பாள் எனில்
5. மாதவிடாய் கட்டத்தைக் கடந்த நிலையில், தொழுநோய் அல்லது சித்தப்பிரமை கொண்ட மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் கடமை கணவனுக்கில்லை. ஆனால், ஒரு மனைவி வம்ச விருத்தியை முன்னிட்டு தொழுநோய் அல்லது சித்தப்பிரமை கொண்ட கணவனுடன் உறவு வைத்துக் கொள்ள முடியும்.
6. மனைவி மற்றும் விதவைகளின் முழுமையான சொத்துரிமைக்கான சட்ட திட்டங்கள்
7. ஒரு பெண் சதிகாரியாகவோ, தீய நடத்தை உள்ளவளாகவோ , நாடோடியாகவோ இருந்தால் தன்னுடைய சொத்துரிமையை அவள் இழப்பாள். மனைவியின் சொத்து என்பது பணம் மற்றும் நகைகள் அடங்கியதாகும். பணம் என்பது 2000 பணத்துக்கு மேற்பட்டது. நகையின் அளவிற்குக் கணக்கே இல்லை.
மனைவியின் சொத்துக்களைப் பயன்படுத்துதல்
(1) தன் கணவன் நீண்ட தூரப் பயணம் செல்வதற்கு முன், குடும்ப நிர்வாகத்துக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யாத நிலையில் மனைவி தன்னுடைய குழந்தைகள், மருமகள்கள் மற்றும் சுய பராமரிப்புக்குத் தனது சொத்துக்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை.
(2) மதச் சடங்குகள் அல்லது நோய், பஞ்சம் மற்றும் தவிர்க்க இயலாத ஆபத்துக்கள் போன்ற அவசரத் தேவைக்காக கணவன் தன் மனைவியின் சொத்துக்களைப் பயன்படுத்தலாம்.
(3) இரட்டைக் குழந்தைகள் ( ஒரு மகன் ஒரு மகள்) பெற்ற தம்பதிகள் பரஸ்பர சம்மதத்துடன் சொத்துக்களைப் பயன்படுத்துவது குற்றமாகாது.
கணவனுக்கு முன் மனைவி இறத்தல்
கணவனுக்கு முன் மனைவியின் இறப்பு நிகழுமெனில் அவளது சொத்துக்கள் கீழ்க்கண்டவாறு பங்கிடப்படும்.
1 மகன்கள் மற்றும் மகள்களுக்குச் சமபங்கு.
2. மகன்கள் இல்லாவிடில் மகள்களுக்குச் சமபங்கு.
3.குழந்தைகள் இல்லாவிடில் கணவனைச் சேரும்.
அது தவிர , வரதட்சணை , பரிசுகள் போன்றவை அளித்தவர்களுக்கே திருப்பி அளிக்கப்படும்.
விதவையின் சொத்துரிமைகள் ( மறுமணம் செய்யாத விதவைகள்)
மறுமணம் செய்ய விரும்பாத விதவைப் பெண்கள் தன் கணவன் உயிரோடு இருக்கும் போது அளித்த பணம், நகைகள், வரதட்சணை இவற்றைப் பெற உரிமை உண்டு.
( இச்சொத்துகள் அவள் இறந்த பின் அவளுடைய மகன்களைச் சேரும்.) கணவனுக்கு விசுவாசமாய் நடந்து கொண்ட குழந்தை அற்ற விதவைப் பெண் , கணவனது குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடைய கண்காணிப்பில் சொத்துக்களைத் தனது வாழ்நாள் முழுக்க அனுபவிக்கலாம். பெருந்துன்பங்கள் ஏற்படும் போது அவளைப் பாதுகாத்துக் கொள்ளவே சொத்துரிமை வழங்கப்படுகிறது. அவளுடைய இறப்புக்குப் பின் அவை உறவினர்களைச் ( வாரிசுரிமைச் சட்டத்திற்கு இணங்க) சென்றடையும்.
மறுமணம் செய்யும் விதவைகள்
மறுமணம் செய்து கொள்ளும் விதவை , மேற்கண்டவாறு தான் பெற்று இருந்த சொத்துக்களை இழந்து விட நேரும். முந்தைய கணவனால் அளிக்கப்பட மற்றவற்றை அவள் வட்டியோடு திருப்பித் தரும் படி இருக்கும்.
( முதல் கணவனின் குடும்பத்தில் இருந்து) ஒருவரை மறுமணம் செய்யும் விதவைப் பெண் கணவன் மற்றும் மாமனாரால் அளிக்கப்பட்ட அனைத்தையும் தாமே அனுபவிக்கலாம். அவளுடைய மாமனாரின் சம்மதத்தைப் பெறாமல் நடந்த மறுமணமாயின் மாமனார் மற்றும் இறந்து போன கணவன் அளித்த சொத்துக்களை அவள் இழக்க நேரிடும். விதவைப் பெண் தனது முந்தைய கணவனது குடும்பத்துக்கு வெளியே மறுமணம் செய்து கொண்டால் சொத்துரிமை அவளுடைய மகன்களைச் சாரும். அவர்களது பராமரிப்பை அவள் தொடர்வாள் எனில் , குழந்தைகளின் பெயரிலேயே அச்சொத்துக்களை அவள் அனுபவிக்க இயலும்.
பலதார மணம், இழப்பீட்டைச் செலுத்துதல்
ஒருவன் எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் பெற முடியும். ஆனால், ஒவ்வொரு மனைவிக்கும் வரதட்சணை , சொத்து, பராமரிப்புக்கானவற்றைத் தந்துவிட வேண்டும். சொத்து, வரதட்சணை இல்லாத மனைவிகளாயின் அவர்களுக்கு பராமரிப்புச் செலவோடு , இழப்பீட்டுத் தொகையைத் தந்து விட வேண்டும்.
மறுமணத்திற்கு முன் கால அவகாசம்
மறுமணம் செய்வதற்கு முன் ஒரு கணவன் காத்திருக்க வேண்டிய காலம் :
மனைவி மலடியாகவோ, பெண்குழந்தைகளை மட்டுமே பெறுபவளாகவோ , எப்பொழுதும் கருச் சிதைவுகளுக்கு உள்ளாகும் நிலையிலோ எட்டு ஆண்டுகள் ஒரு கணவன் சட்டப்படி காத்து இருத்தல் அவசியம். பிறக்கும் குழந்தைகள் இறந்து பிறந்த குழந்தைகளாகவே இருப்பின் பத்து ஆண்டுகள் கணவன் காத்திருந்து மறுமணம் செய்யலாம் . உயிரோடிருக்கும் அத்தனை குழந்தைகளும் பெண் குழந்தைகளாக இருப்பின் பன்னிரண்டு ஆண்டு காத்திருந்து, பிறகு ஒரு கணவனாகப்பட்டவன் மறுமணம் செய்யலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை உடைய கணவனின் கடமைகள்
ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் கருவுறக்கூடிய பக்குவத்தில் இருக்கும் பொழுது கணவன் தான் முதன் முதலில் மணந்தவளுக்கே கலவியில் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒரு மனைவி தான் கருவுறக்கூடிய பக்குவத்தில் இருப்பதைக் கணவனிடம் மறைக்கக் கூடாது. அவள் மூலம் குழந்தைக்கு முயலும் கடமையில் கணவன் தவறக் கூடாது.
மண முறிவில் ஒரு பெண்ணுக்கான உரிமைகள் மற்றும் அர்த்தசாஸ்திரத்தில் உள்ள மௌர்ய காலத்து விவாகரத்து சட்ட திட்டங்கள்
ஒரு கணவன் –
1.தீய குணங்களைப் பெற்று இருந்தாலும்.
2.அந்நிய தேசத்தில் நீண்ட காலம் தங்கி விட்டு இருந்தாலும்.
3.இராஜத்துரோகியாக இருந்தாலும்.
4.மனைவிக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய கணவன், மனைவியின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினாலும்.
5.ஆண்மை அற்றவனாக இருந்தாலும்
- அவனுடைய மனைவி அவனைக் கைவிடலாம். அதில் தவறு ஏதும் இல்லை.
துன்புறுத்தல்
ஒரு மனைவிக்கு முறையாக எப்படி நடந்து கொள்வது என்று போதிக்க முடியும். ஆனால் , கணவன் அவளை கண்டபடி திட்டக் கூடாது. அவள் மூன்று முறைக்கு மேல் தவறு செய்யும் பொழுது கணவன் அவளைக் கையினாலோ, கயிற்றினாலோ, பிரம்பாலோ அடிக்கலாம். இதனை மீறிய துன்புறுத்தல்கள் கண்டிப்பாக தண்டனைக்கு உரியதாகும்.
மனைவியைக் கொடுமை செய்யும் கணவனைப் போன்றே, கணவனைக் கொடுமை செய்யும் ( திட்டுதல், அடித்தல்) மனைவியும் அதே இடத்தில் தண்டனைக்கு உரியவள் தான். அது போல, பொறாமை கொண்ட மனைவி தனது சொந்த சுகங்களுக்காக கணவனின் வீட்டை விட்டு வெளியேறினால் அது தண்டனைக்கு உரிய குற்றமாகும்.
சேர்ந்து வாழ முடியாத நிலை:
தன் கணவன் மீது கொண்ட வெறுப்பால் தன்னை அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பதோடு , தொடர்ந்து ஏழு மாதவிலக்குக் கட்டங்களுக்கு கணவன் தன்னோடு உறவு கொள்ள அனுமதிக்காத மனைவி . அவனிடமிருந்து பெற்ற நகைகளை , ஆவணம் மூலம் பெற்ற சொத்துக்களை அவனிடமே திருப்பிக் கொடுத்து விட வேண்டும். அவன் மற்றொரு பெண்ணுடன் சேர அனுமதிக்கலாம். தன் மனைவியின் மீதே விருப்பமற்ற கணவன் அவள் பிரிந்து வாழ்வதற்கு அனுமதிக்கலாம். அந்நிலையில் ஒரு பாதுகாவலர் உறவினர் அல்லது வசதியற்ற ஒரு பெண்ணின் கண்காணிப்பில் அவள் விடப்படுவாள். ஆனால், தன் மனைவியின் மீது பொய்க் குற்றம் சாட்டும் ஒருவன் ( கணவன்) கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவான் .
தவறான நடத்தை:
1.ஒருவருக்கொருவர் மணம் செய்து கொள்ளாத ஆணும், பெண்ணும் தங்களுக்குள் உடலுறவுக்கான நோக்கத்துடன் கைச் சாடை அல்லது இரகசிய உரையாடல் வைத்துக் கொள்ளக் கூடாது . ஆணோ, பெண்ணோ ஒருவர் மற்றவருடைய உரோமத்தைத் தொடுவதோ, கீழாடை முடிச்சை அவிழ்ப்பதோ, ஒருவர் மீது மற்றவருடைய நகக் குறி அல்லது பற்குறி பதிப்பதோ கூடாது. அத்தகைய செயல்களைச் செய்யும் நபருடன் ஒரு பெண் எவ்வித பேரமும் ( வாங்குவது கடன் பெறுவது ) வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு குடும்பப் பெண் நாகரிகம், கலாசாரம் என்ற பெயரில் மது அருந்தக் கூடாது.
2.தன் கணவனின் துணை இல்லாமல் அவள் உல்லாசப் பயணம் செல்வதோ கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதலோ கூடாது. மேற்கண்டவாறு செய்வது தவறாகும், மேலும் அது அவளுக்கு பாதுகாப்பும் அல்ல . அது போல, கணவன் உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுது வெளியில் செல்வதோ , கணவன் வெளியில் இருந்து வரும் போது அவள் கதவைத் திறவாமல் இருத்தலோ கூடாது.
3.ஒரு ஆண் கெட்டுப் போவதைக் காட்டிலும் , ஒரு பெண் கெட்டுப் போவது அடுத்த தலைமுறையையே கெடுத்து விடும். அது நாட்டுக்கும் நல்லதல்ல. ( மேற்கண்ட அனைத்தில் இருந்தும் ஒரு வேசிக்கு விதிவிலக்கு உண்டு . வேசி மது அருந்துவதில் தவறில்லை) .
மனைவி வெளியேறுதல்:
தன் கணவனால் மோசமாக நடத்தப்பட்டால் அன்றி ஒரு பெண் தன்னுடைய புகுந்த வீட்டில் இருந்து வெளியேறக் கூடாது. மனைவி தன்னுடைய உறவினரின் மரணம், பிணி, விபத்து அல்லது குழந்தைப் பிறப்பு போன்ற காரணங்களுக்காய் சென்று வருவதைக் கணவன் தடுக்கக் கூடாது. அப்படியான காரணங்களுக்காக அவள் சென்று வருதல் வீட்டை விட்டு வெளியேறியது ஆகாது. ( எனினும் அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவள் மறைந்து விடுதல் கூடாது) மனைவி அவ்வாறு செய்தால், அதனால் கணவன் தலை குனிய நேரிடும். ஏனெனில், மனைவியின் நடத்தை தான் ஒரு ஆணுக்கு கௌரவத்தை தரும் .
கள்ளத் தொடர்பு:
நீண்ட தூரப் பயணம் மேற்கொண்ட ஒருவனின் மனைவி தனது உறவினர் அல்லது கணவனின் பணியாளோடு கள்ளத் தொடர்பு வைத்து இருக்கலாம். பயணம் முடிந்து திரும்பும் கணவன் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் அப்பெண்ணோ அவளது காதலனோ தண்டிக்கப்பட மாட்டார்கள். மாறாக, கணவன் எதிர்ப்பு தெரிவித்தால் மனைவி அங்கவீனம் செய்யப்படுவதுடன் , அவளது காதலன் கொல்லப்படுவான். எவருமே கள்ளத் தொடர்பை மறைத்தல் கூடாது. கள்ளத் தொடர்புடைய ஒருவனைப் பிடித்து , அவனைத் திருடன் என்று அறிவிக்கிறவர் தண்டனைக்கு உரியவர் ஆவார். யாரும் லஞ்சம் பெற்றுக் கொண்டு முறையற்ற விதத்தில் உறவு கொண்டவர்களைத் தப்பவிடக் கூடாது. ஒருவருடைய முடி இன்னொருவர் மீது காணப்படுவது , உடலின் அடையாளங்கள் , தேர்ந்தவர்களின் கருத்து, பெண்ணின் ஒப்புதல் இவை கள்ள உறவுக்குச் சான்றுகளாய் கருதப்படும்.
துறவு:
எவரும் தனது மனைவி , மக்களுக்குத் தேவையானவற்றை வழங்காமல் இல்லறத்தில் இருந்து வெளியேறி துறவறம் பூண முடியாது. அதுபோல, குழந்தை பெரும் தகுதி உடைய பெண்ணைத் துறவு கொள்ளத் தூண்டக் கூடாது. பால் சார்ந்த செயல்களில் ஈடுபடும் வயதைக் கடந்த ஆண், துறவு கொள்ள முடியும். நீதிபதிகளின் ஒப்புதலோடு தான் அதை அவர் செய்ய முடியும். நீதிபதிகள் ஒப்புக் கொள்ளாவிடில் அவர் துறவு பூணுவதில் இருந்து தடுக்கப்படுவார்.
மணவிலக்கு:
முதல் நான்கு வகைத் திருமணங்களில் விவாகரத்துக்கு இடமே இல்லை. பிந்தைய நான்கு வகைத் திருமணங்களில் பரஸ்பரம் வெறுப்பு இருந்தால் மட்டுமே மணமுறிவு ஏற்பட முடியும். தன் மனைவியின் தவறான நடத்தையைக் காரணம் காட்டி விவாகரத்துக் கோரும் ஒருவன் அவளிடமிருந்து பெற்ற அனைத்தையும் திருப்பித் தந்து விட வேண்டும்.எனினும், கணவனின் தவறான நடத்தையைக் காரணம் காட்டி விவாகரத்துக் கோரும் மனைவிக்கு அவன் எதையும் திருப்பித் தர வேண்டியதில்லை. ஒருவேளை, அவன் பொய்யாக மனைவி மீது பழி போட்டு, அதுவும் நிருபிக்கப்படுமாயின் . அவன் பொய் கூறியதற்காக கடுமையான சவுக்கடிகளை அவன் மறக்காத படி, ஊரில் உள்ள அனைவரும் பார்க்க அவனுக்குத் தண்டனையாக தரப்பட வேண்டும்.
பிரிவினைக்குப் பின் மனைவியின் பராமரிப்பு:
மனைவிக்கான ஜீவனாம்சம் சரியான கால இடைவெளிகளில் தீர்க்கப்ப்படுமெனில் கணவன் தனது வருவாயைக் கணக்கிட்டு முறையான தவணைகளில் அவற்றை வழங்க வேண்டும். ஜீவனாம்சத்திர்க்கான கால இடைவெளி நிர்ணயிக்கப்படாத நிலையில் , மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான உணவு , உடை இவற்றைத் தனது வருவாய்க்கு ஏற்ப கூடுதலாகவும் அளிக்கலாம். மனைவி சுயேட்சையாய் செயல்படும் நிலையில் இருந்தாலும், கணவனின் குடும்பத்தாரால் ஆதரிக்கப்பட்டு இருந்தாலும், கணவன் மீது வழக்குத் தொடர முடியாது.
திருமண வாழ்வில் மேற்கண்ட சட்டங்களை மீறும் பொழுது அளிக்கப்படும் அதற்குரிய தண்டனைகள் மற்றும் அதன் விதங்கள்:
1.பெண்ணின் குறைபாட்டை மறைத்து திருமணம் செய்தால் 96 பணம் நஷ்ட ஈடாக அளிக்கப்பட வேண்டும். அதுவே, ஆண் தனது ஆண்மைக் குறைபாட்டை மறைத்துத் திருமணம் செய்தால் 192 பணம் நஷ்ட ஈடாக பெண் வீட்டாருக்கு அளிக்க வேண்டும்.
2.மணமகனை மாற்றி தில்லு முள்ளு செய்தால் 200 பணம் அபராதத்தை அந்தப் பெண் வீட்டாருக்கு மண மகன் வீட்டார் அளிக்க வேண்டும், அத்துடன் அந்த மணப்பெண்ணுக்கு அத்திருமணத்தை நிறுத்தும் அதிகாரமும் உண்டு.
3.ஒரு பெண் வீட்டை விட்டு நகைகளோடு ஓடி தனக்குப் பிடித்த வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டால் . அவள் தகப்பன் வீட்டு நகையை எடுத்தமைக்காக திருட்டுக்கு அளிக்கப்படும் தண்டனையை அவளுக்கு அளிக்கலாம். ஒரு வேலை அவளது தந்தை, அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால் . அவளை மன்னிக்கலாம் .
4.மண வாழ்விற்கு உரிய கடமைகளைச் செய்யத் தவறினால் , தவறியது பெண்ணாக இருப்பின் 12 பணமும், ஆணாக இருப்பின் 24 பணமும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் . அத்துடன் அவ்வாறு மண வாழ்க்கையை விட்டு ஓடியவர்களுக்கு கடுமையான தண்டனையும் அளிக்கப் பட வேண்டும்.
5.ஒரு பெண் கன்னித் தன்மையோடு இருப்பதாய் பொய் கூறினால் 200 பணம் அபராதமாக செலுத்துவதுடன். ஆணுக்கு ( அவள் கணவனுக்கு ) அவளை நிராகரிக்கும் உரிமையும் உண்டு.
6.இத்துடன் மதுவருந்தும் மனைவிக்கு 3 பணம் அபராதம் விதிக்கலாம்.
