எழுச்சிப் படலம் - 831
சேனை செல்லும் வழி
831.
இணை எடுத்து இடை இடை
நெருக்க. ஏழையர்
துணை முலைக் குங்குமச்
சுவடும். ஆடவர்
மணி வரைப் புயத்து மென்
சாந்தும். மாழ்கி. மெல்
அணை எனப் பொலிந்தது -
அக் கடல் செல் ஆறுஅரோ.
இடை இடை- (அச்சேனை செல்லும்) இடங்களில் எல்லாம்;
இணை எடுத்து - (கூட்ட மிகுதியால்) ஒருவரை ஒருவர் இணைதலைப்
பொருந்தி; நெருக்க - நெருக்குதலால்; ஏழையர் துணைமுலை -
மகளிரின் இரு முலைகளிலும்; குங்குமச் சுவடும் - அணிந்த குங்குமக்
குழம்பும்; ஆடவர் மணி - ஆண்களின் அழகிய;வரைப் புயங்களில்
சாந்தும்- மலைபோன்ற தோள்களில் பூசிய சந்தனக் குழம்பும்; மாழ்கி
- (கீழே உதிருமாறு) அழிந்து போய்; அக்கடல் செல் ஆறு- அந்தக்
கடல் செல்லுகின்ற வழியானது; மெல் அணை என - (ஆண்களும்
மகளிரும் கலவி நிகழ்த்தும்) மெல்லிய படுக்கைபோலப்; பொலிந்தது -
பொலிவுற்றது.
கூட்ட மிகுதியால் இடையிடையே நெருக்கம் உண்டாக. அதனால்
ஒருவர்மேல் ஒருவர் உராய்தலால் சந்தனமும் குங்குமமும் உதிர்ந்தன.
அவ்வாறு உதிர்ந்த அக்குழம்புகள் கலந்து செல்லும் வழி
படுக்கைபோல விளங்கிற்று என்பது. - தன்மைத் தற்குறிப்பேற்ற
அணி. 15
