எழுச்சிப் படலம் - 825

bookmark

சேனை செல்லுதல்

நால்வகைப் படைகளின் எழுச்சி
 
825.    

விடை பொரு நடையினான் சேனை வெள்ளம். ‘ஓர்
இடை இலை. உலகினில்’ என்ன. ஈண்டிய;
கடையுக முடிவினில். எவையும் கால் பட.
புடை பெயர் கடல் என. எழுந்து போயதே.
 
உலகினில்- உலகத்தில்; ஓர் இடை- சிறிது இடமும்;  இலை என்ன
-  இல்லை என்று சொல்லுமாறு; ஈண்டிய - நெருங்கிய; விடைபொரு -
காளையைப்  போன்ற; நடையினான் - நடையுடைய தசரதன்;  சேனை
வெள்ளம்  -  சேனைக்  கூட்டமானது;  கடையுக முடிவினில் - உலக
முடிவுக்  காலத்தில்;  எவையும்  - எல்லாப் பொருள்களும்; கால்பட -
எழும்   பெருங்காற்றால்  அழிந்துபட;   புடை  பெயர் - (அப்போது)
கரைபுரண்டு வருகின்ற; கடல் என - கடலைப்போல; எழுந்து போயது
- எழுந்து சென்றது.

பெருமிதம்     பற்றிக்  காளையின்   நடை   அரசனது   நடைக்கு
உவமையாயிற்று.  தன்மைத்  தற்குறிப்பேற்றவணி  - தசரதன்    சேனை
யுக முடிவில் பொங்கியெழும் கடல் போல எழுந்தது என்றார்.        9