எழுச்சிப் படலம் - 816

bookmark

சனகன் தூதர்கள் தசரதன் அரண்மனையை அடைதல்

816.    

கடுகிய தூதரும். காலில் காலின் சென்று.
இடி குரல் முரசு அதிர் அயோத்தி எய்தினார்;
அடி இணை தொழ இடம் இன்றி. மன்னர்தம்
முடியொடு முடி பொரு வாயில் முன்னினார்.
 
கடுகிய   தூதரும்- (சனகனால் அனுப்பப்பெற்று) விரைந்து  சென்ற
தூதர்களும்;  காலில்  சென்று  -  காற்றைப் போல விரைந்து சென்று;
இடிக்குரல்  -  இடியின்  குரலைப் போல; முரசு அதிர் - பேரிகைகள்
முழங்குகின்ற;   அயோத்தி   எய்தினார்   -   அயோத்தி   நகரை
அடைந்தனர்; அடி இணை  தொழ - அம்மன்னனுடைய  பாதங்களைத்
தொழுவதற்கு;   இடம்    இன்றி   -   (உள்ளே   செல்ல)   இடம்
கிடைக்காததால்;    மன்னர்   தம்   முடியொடு? -  சிற்றரசர்களின்
பொன்முடிகளோடு;  முடி  பொரு  -  முடிகள்  தாக்கிக்  கொள்கின்ற;
வாயில் - அரண்மனை வாயிலை; முன்னினார் - அடைந்தார்கள்.

மணச்  செய்தி  சொல்ல வருகின்ற தூதர்களுக்கு  ஏற்ப  மங்கலமாக
‘முரசு அதிர் அயோத்தி’ என்றார்.

மன்னர்கள்   தசரதனை   வணங்க   முந்துகின்றார்கள்.   அதனால்
அவர்களின் பொன்முடியோடு முடிகள் மோதுகின்றன என்றார்.       1