எதிர்கொள் படலம் - 1134
இருவருடன் வந்த சேனையின் பெருக்கம்
1134.
யானையோ. பிடிகளோ. இரதமோ. இவுளியோ.
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார்-
தானை ஏர் சனகன் ஏவலின். நெடுந் தாதை முன்
போன பேர் இருவர்தம் புடை வரும் படையினே?
நெடுந்தாதை முன்பேர் இருவர் தம் புடை- (பெருமைக்குணம்)
மிக்க தம் தந்தையான தசரதனது எதிரிற் சென்று பெருமைக்குரிய
(இராம. இலக்குவர்) இருவரின் பக்கத்திலே; தானை ஏர் சனகன்
ஏவலில் வரும் படையின் - படைக்குரிய அழகினையுடைய சனகனின்
ஏவலினால் உடன் வரும். சேனையில்; யானையோ. பிடிகளோ.
இரதமோ. இவுளியோ - (ஆண்) யானைகளோ? பெண் யானைகளோ?
தேர்களோ? குதிரைகளோ? (இவற்றுள் எவையோ மிகுந்தவை?);
ஆனபேர் உறைஇலா நிறைவை யார் அறிகுவார்?-பெரிய எண்களை
எண்ணுவதற்கான உறையென்னும் குறிப்பிலககம் இட்டும்
எண்ணமுடியாத (அந்த யானை முதலியவற்றின்) நிறைவினை அறிந்து
கூறவல்லவர் யாவருளர்?
உறை - ஓர் இலக்கக் குறிப்பு. பொருள்களை எண்ணுங் காலத்து
ஒவ்வொரு பெரிய எண்ணுக்கும் கழற்சிக்காய். குன்றிமணிகளை
ஒவ்வொரு விழுக்காடு வைக்கும் சிறு குறியீடு. “உறைபோடக் காணாது”
என்னும் வழக்கம் காண்க. “ஒழிந்த பேர் உயிர்கள் எல்லாம்
அரக்கருக்கு உறையும் போதா” (கம்ப. 4868) ;“அம்பண அளவை
உறை குறித்தாங்கு” (பதிற். 11:5) ; “இவ்வரக்கர்........உறையிடவும்
போதார்” (கம்ப. 5344) எனவருவனவும் காண்க. 21
