எதிர்கொள் படலம் - 1133
இராமன் எதிர்கொண்ட வகை
1133.
தம்பியும். தானும். அத் தானை மன்னவன் நகர்ப்
பம்பு திண் புரவியும். படைஞரும். புடை வர.
செம் பொனின். பசு மணித் தேரின் வந்து எய்தினான்-
உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான்.
உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான்- மேலுலகத்
தேவர்களும். இவ்வுலக மனிதர்களும். கீழ் உலக நாகர்களும் (என
மூவுலகத்து உயிர்களும்) வணங்கி மகிழ உள்ளவனாகிய இராமபிரான்;
பம்புதிண் புரவியும். படைஞரும் புடை வர- நெருங்கிய வலிமைமிக்க
குதிரைகளும். படை வீரர்களும் சூழ்ந்து வர; அத்தானைமன்னவன்
நகர் - படைப்பெருமை மிக்க சனக மன்னருடைய
அந்நகரத்தினின்றும்; செம்பொனின் பசுமணித் தேரின் வந்து
எய்தினான் - சிவந்த பொன்னால் செய்யப் பெற்று. பச்சை மணிகள்
பதிக்கப் பெற்ற தேரில் ஏறி. (தன் தந்தையை) எதிர் கொள்ள
வந்தடைந்தான்.
“மூவுலகும் தொழ உள்ளான்” தந்தையைத் தொழ உள்ளான்
என்றபடி. இராமனுடன் வரும் சேனை. சனகன் சேனையே.
சேனையின்றி அரச குலத்தார் சிறப்பு நிகழச்சிகளில் வாரார்
எனும் மரபு தெரிவித்தவாறு. மூவுலகத்தாறும் வணங்கவுள்ள
பெருமான். ஓருலகத்தில் ஒரு பகுதியை ஆள்கின்ற தசரதனைத்
தொழ வருகிறான் என்று அவதாரத்தின் எளிவந்த
கருணைத்திறமாகிய (சௌலப்பியம்) நீர்மை சுட்டியவாறு. 20
