ஊர்சூழ் வரி
எழுந்து ஒலித்த அக்குரலை அனைவருமே கேட்டனர். கண்ணகியும், தன்பாலிருந்த மற்றொரு சிலம்பினைத் தன் கையிலே எடுத்துக் கொண்டவளாகத், தன் கணவனின் உடலினை காணப் புறப்பட்டாள். அவன் கிடந்த நிலையைக் கண்டு அரற்றினாள். அவன் வாய் திறந்து பேசவும் கேட்டாள். குலமகளாகப் பொறுமையின் வடிவமாகத் துயரங்களைத் தாங்கி அமைதியோடிருந்தவள், கொதித்துப் பலரும் அஞ்சி ஒதுங்க, வம்பப் பெருந்தெய்வம்போல ஆவேசித்து, மன்னன் அரண்மனை நோக்கி அறம் கேட்கப் போகும் நிலையையும் காண்கின்றோம். இந்த நிலைமாற்றம் பெண்மையின் தெய்வீகப் பேரியல்பு என்றும் உணர்கின்றோம்.
