உலாவியற் படலம் - 1196
1196.
ஏதி யாதவர். ஏழ் திறல் கொங்கணர்.
சேதி ராசர். தெலுங்கர். கருநடர்.
ஆதி வானம் கவித்த அவனி வாழ்
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார்.
ஏதி யாதவர். ஏழ்திறல் கொங்கணர் - ஆயுதங்கள் ஏந்திய
யாதவ அரசரும். ஏழு பகுப்பினையுடைய கொங்கண அரசர்களும்;
சேதிராசர். தெலுங்கர் கருநடர் - சேதி நாட்டு மன்னர்களும்.
தெலுங்கு தேசத்தரசரும். கருநாடக மன்னரும்; ஆதி வானம்
கவித்த அவனி வாழ் சோதி நீள்முடி மன்னரும் துன்னினார்
- (இவ்வாறு பஞ்ச பூதங்களுள்) முதலாவதான ஆகாயத்தாற்
சூழப்பட்டுள்ள மண்ணுலகில் வாழும் ஒளிமிக்க மகுடங்களையணிந்த
அத்தனை அரசர்களும் அம்மண்டபத்தில் வந்து நெருங்கினார்கள். 49
