உலாவியற் படலம் - 1192

bookmark

தசரதனும் வருதல்

தயரதனும் மண்டபத்திற்கு வந்து அமர்தல்
 
1192.    

ஆன மா மணி மண்டபம் அன்னதில்
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன் -
மீன் எலாம் தன் பின் வர. வெண்மதி.
வான் நிலா உற வந்தது மானவே.
 
மீன்    எலாம் தன்பின்வர- எல்லா நட்சத்திரங்களும்  தனக்குப்
பின்னேவர; வெண்மதி  வான்நிலா உற வந்தது மான- வெண்ணிறச்
சந்திரன்   வானத்தை  ஒளியுறச்  செய்து  வருவது  போல;  தானை
மன்னன்  -  சேனைகளையுடைய தசரத சக்கரவர்த்தி; ஆன மாமணி
மண்டபம்  அன்னதில்  சார்ந்தனன்  -  பெருமைக்குரிய  மணிகள்
பொருந்திய அந்த மண்டபத்தை அடைந்தான்.

மீனுக்கும்     வானுக்கும் திங்களின் வருகை தனிப்பொலி வூட்டுதல்
போல.   அம்மண்டபமும்  அங்குள்ளோரும்   தசரதன்   வருகையால்
தனிப்பொலிவெய்தினர் என்க.                                45