உலாவியற் படலம் - 1190

bookmark

வசிட்டனையும் கோசிகனையும் இராமன் வணங்குதல்

1190.    

திருவின் நாயகன். மின் திரிந்தாலெனத்
துருவு மா மணி ஆரம் துயல்வர.
பருவ மேகம் படிந்ததுபோல் படிந்து.
இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான்.
 
திருவின் நாயகன்.  மின்  திரிந்தால்  எனத்  துருவு  மாமணி
ஆரம்துயல்  வர  -  திருமகளின் நாயகனாகிய இராமபிரான் மின்னல்
உலாவித்  திரிந்தாற்போல.  தேடி எடுத்துப்  பதித்த சிறந்த  (இரத்தின)
மணிமாலைகள்  தன்  மார்பில்  அசைந்து  ஒளி  வீச;   பருவமேகம்
படிந்தது  போல்  படிந்து - கார் காலத்து (நீர்கொண்ட கரிய) மேகம்
(பூமியிலே  வந்து)  தாழப்படிந்தது  போல.  கீழே  தாழ்ந்து;   இருவர்
தாளும்  முறையின்  இறைஞ்சினான் -  வசிட்டன்   விசுவாமித்திரன்
என்னும் இருவரின் திருவடிகளையும் முறையே வணங்கினான்.

கார்மேகம்     மண் நோக்கித் தாழ்வது. உலகு வளம் செழிப்பதற்கு
ஆதலின். இராம மேகமும் உலகுக்கு நலம் செழிக்கத்  தாழ்ந்தது என்க.
வசிட்டன்   குலகுரு.   விசுவாமித்திரன்  இடைவந்த  குரு.   ஆகவே.
வசிட்டனை    முதலில்     வணங்கி.    அடுத்து   விசுவாமித்திரனை
வணங்கினான்     என்பதுணர்த்த.    “இருவர்   தாளும்   முறையின்
(முறைப்படி) வணங்கினான்” என்றார்.                          43