உலாவியற் படலம் - 1188

bookmark

ஒருத்தி மாரனின் வன்மையைக் கூறல்

1188.    

ஆரமும். துகிலும். கலன் யாவையும்.
சோர. இன்உயிர் சோரும் ஓர் சோர்குழல்.
‘கோர வில்லிமுன்னே எனைக் கொல்கின்ற
மாரவேளின் வலியவர் யார்?” என்றாள்.
 
ஆரமும் துகிலும் கலன் யாவையும்- முத்து மாலையும். சேலையும்
பிற  ஆபரணங்கள் யாவற்றையும் (இராம வேட்கையால்  வந்த) ; சோர
இன்னுயிர் சோரும் ஓர்  சோர்  குழல்  - (தன் உடல் இளைப்பால்)
கழலவிட்டு உயிரும் தளர்ந்து விழும் நிலையுடைய  தளர்ந்த  கூந்தலாள்
ஒருத்தி; கோர வில்லி முன்னே எனைக் கொல்கின்ற மாரவேளின்-
‘அச்சம்    தரத்தக்க    வில்லை     ஏந்தியுள்ள    இந்த   இராமன்
முன்னிலையிலேயே  அஞ்சாமல்  வில்  எய்து  என்னைக்  கொல்கின்ற
மன்மதனைப் போன்ற; வலியவர் யார்?’ என்றாள் - வலிமையுடையார்
உலகில் யாவர் உளர்?’ என்று கேட்டாள்.

பெருவீரனின்     முன் எதிர் நிற்கும் துணிவே பெருவீரம்.   ஆம்.
ஆதலால்.  இராமன் என்னும் பெருவீரன்  கண்முன்னே  அபலைகளை
எய்கின்ற  மன்மதன் பெருவீரன்தான் என்று  குறிப்பால்  இகழ்ந்தவாறு.
அபலைகளை  எய்கின்ற  ஒருவனைத்  தட்டிக்   கேட்காது   நிற்கின்ற
இராமனின்   நிலையையும்   குறிப்பால்  சுட்டி  வருந்தினாள்   என்க.
ஆரமும்.  துகிலும்.  கலன்  யாவையும்   சோர்வதனால்   இன்  உயிர்
சோர்கின்றமை தெரிவித்தவாறு.                                41