உலாவியற் படலம் - 1164
ஒருத்தி பெண்கள் இடைகளின் வெளிகளூடே பார்த்தல்
1164.
கருங் குழல் பாரம். வார் கொள்
கன முலை. கலை சூழ் அல்குல்.
நெருங்கின மறைப்ப. ஆண்டு ஓர்
நீக்கிடம் பெறாது விம்மும்
பெருந் தடங் கண்ணி. காணும்
பேர் எழில் ஆசை தூண்ட.
மருங்குலின் வெளிகளூடே.
வள்ளலை நோக்குகின்றாள்.
கருங் குழல் பாரம்- (தனக்கு முன்னே வந்து. இராமனைக் காண
இடம்பிடித்துக் கொண்டுள்ள மாதர்களின்) கரிய கூந்தலின்
தொகுதியும்; வார்கொள் கனமுலை - கச்சணிந்த பருத்த மார்புகளும்;
கலை சூழ் அல்குல் - மேகலை சூழப்பெற்ற இடைசார் பகுதியும்
(எங்கும்); நெருக்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கிடம் பெறாது -
நெருக்கம் உற்றனவாய் (இராமன் திருமேனி காணாவாறு) மறைத்து
நிற்றலால் இவையற்ற இடம் இல்லாமையால்; விம்மும்
பெருந்தடங்கண்ணி - வருந்தி மறுகும் மிகப் பெரிய
கண்களையுடையாள் ஒருத்தி; பேர் எழில் ஆசை தூண்ட - (அவள்
கேள்வியுற்ற இராமனது) பேரழகு. அவனைப் பார்த்தாக வேண்டும்
என்றும் ஆசையினைத் தூண்டுதலால்; மருங்குலின் வெளிகளூடே
வள்ளலை நோக்குகின்றாள் - முன்னே மறைந்து நிற்கும் மகளிரின்
இடையின் இடைவெளிகளிடையே வள்ளலாகிய இராமபிரானைப்
பார்த்துக்கொண்டிருக்கின்றாள்.
“அகல் அல்குல் தோள் கண் என மூவழிப்பெருகி. நுதல். அடி.
நுசுப்பு என மூவழிச் சிறகி” (கலி. 108) எனும் உத்தம மங்கையர்
இலக்கணம் முற்றும் அமைந்த மகளிரே அங்கே உள்ளோர்
அனைவரும் எனும் கருத்தைச் சுவையுறக் கூறியவாறு. 17
