உலாவியற் படலம் - 1155
ஒரு தரெிவை எல்லாவற்றையும் உகுத்து நிற்றல்
1155.
பயிர் ஒன்று கலையும். சங்கும்.
பழிப்ப அரு நலனும். பண்பும்.
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும்.
சிந்தையும். உணர்வும். தேசும்.
வயிரம் செய் பூணும். நாணும்.
மடனும். தன் நிறையும். மற்றும்
உயிர் ஒன்றும். ஒழிய எல்லாம்
உகுத்து. ஒரு தெரிவை நின்றாள்.
ஒரு தெரிவை - (வேட்கை பிறந்த பருவமாகிய) தெரிவைப் பருவம்
உடையாள் ஒருத்தி; தன்பயிர் ஒன்று கலையும் சங்கும். பழிப்பறு
நலனும் பண்பும் - தனது பயிர்ப்பு என்னும் குணத்தையும். உடலைப்
பிரியாது இணைந்திருந்த ஆடையையும். சங்க வளையல்களையும்.
பழித்தற்கியலாத நற்செயல்களையும். இயற்கை இயல்பையும்;
செயிர்இன்றி அலர்ந்த பொற்பும் சிந்தையும் உணர்வும் தேசும்-
குற்றமற்று மிக்கு விளங்கும் அழகையும். மனத்தையும். அறிவையும்.
ஒளியையும்; வயிரம் செய் பூணும். நாணும். மடனும் தன்நிறையும்
மற்றும் - வயிரங்கள் பதித்த நகைகளையும். நாணத்தையும் மடம்
எனும் பெண்மைக் குணத்தையும். மன அடக்கத்தையும். மற்றுமுள்ள
பெண்மைக்குரிய இயல்புகளையும்; உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம்
உகுத்து ஒரு தெரிவை நின்றாள் - உயிர் ஒன்றைத்தவிர.
எல்லாவற்றையும் சிந்தவிட்டு (இராமன் சென்றுவிட்டதனால்
செய்வதறியாது) நின்றாள்.
தெரிவை - 26-31 வயதுடையவள். உலகியற்பொருள்கள்
அனைத்தையும் தாமே தம்மை விட்டு நீங்குமாறு செய்வது ஆன்ம
நாயகன் மேல் கொள்ளும் அன்பு என்பது குறித்தவாறு. பயிர்ப்பு- பிற
ஆடவர்பொருள்கள்படின் பெண்மைப்படும் அருவருப்பு. “உயிரினும்
சிறந்தது நாணே நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று”
(தொல். களவு. 23) என்பவாதலின். இவள் எப்படி இவற்றையும்
உகுத்தாள் என வியந்தவாறு. 8
