உலாவியற் படலம் - 1151

bookmark

1151.    

பள்ளத்துப் பாயும் நல் நீர்
   அனையவர். பானல் பூத்த
வெள்ளத்துப் பெரிய கண்ணார்.
   மென் சிலம்பு அலம்ப. மென் பூத்
தள்ள. தம் இடைகள் நோவ.
   தமை வலித்து. ‘அவன்பால் செல்லும்
உள்ளத்தைப் பிடித்தும் நாம்’ என்று.
   ஓடுகின்றாரும் ஒத்தார்.
 
பள்ளத்துப் பாயும் நன்னீர் அனையர் - பள்ளம் நோக்கிப் பாயும்
(தன்மையுடைய)  நல்ல நீரின் தன்மையுடையவர்களாய்;   வெள்ளத்துப்
பானல்  பூத்த பெரிய கண்ணார் - நீர் ஓடையில் பூத்த கருங்குவளை
மலர்களிலும்     பெரிய      கண்களையுடையவர்களாகிய    மகளிர்;
மென்சிலம்பு அலம்ப. மென்பூத் துள்ள  தம்  இடைகள்  நோவ -
மெல்லிய  சிலம்புகள்  ஒலிக்கவும்.  மெல்லிய மலர்கள் சரியவும்.   தம்
மெல்லிய  இடைகள் வருந்தவும்; தமைவலித்து அவன் பால் செல்லும்
-  தம்மை  (பின்னே  வர)  இழுத்துக்கொண்டு  அவனிடத்து    (முன்)
செல்கின்ற;  உள்ளத்தை  நாம்  பிடித்தும் என்று - (தமது) மனத்தை
நாம்  (ஓடிப்போய்ப்) பிடிக்க வேண்டும் என்று; ஓடுகின்றாரும் ஒத்தார்
- ஓடுகின்றவர்களையும் போன்று (மனோ வேகத்தில்) விரைந்தனர்.

பெரும்     பள்ளமாகிய கடலில் போய்ச் சேர்ந்தபின்.  இயக்கத்தை
நிறுத்தித்     தனித்தன்மை    நீங்கி     விடும்     நதிகளைப்போல.
உயிர்கள்யாவும்  இறைவனிடத்தில்  சென்று   அடங்கும்    தன்மையன
என்னும் தத்துவக் கருத்தினை அடியிற் காண்க.

வெள்ளம்     பள்ளம் பாயும் இயல்பினது ஆதலின் “பள்ளத்துப்
பாயும்  நல் நீர்” என்றார். இன்பத்தைப் பள்ளமடை என்னும் வழக்கு
உண்மையின்.

“பள்ளத்துப்     பாயும் நன்னீர் அனையவர்”   என்றார்.   மகளிர்
வெள்ளத்தின்   வேகத்தில்   விரைந்தார்   எனினுமாம்.  வெள்ளத்துப்
பானல் (போல்) பூத்த பெரிய   கண்ணார் எனப்பொருள் இயல்புக்கேற்ப
மாற்றிக்  கூட்டப்பட்டது.  பானல் - கருங்குவளைப்பூ;   வெள்ளம் என்
தனைக் கடல் எனக் கொண்டு.  உயர்வு  நவிற்சியாகக் கடலினும் பெரிய
கண்ணார்  என்றார்  எனினுமாம். “கடலினும்  பெரிய  கண்கள்” (கம்ப.
3136)  என்பார்  மேலும்.  இராமனுடன்   சென்றுவிட்ட   உள்ளத்தைப்
பிடிக்க  ஓடுவார்போல்  மகளிர்  ஓடினர்  என்பதால்  மனோ வேத்தில்
ஓடினர் என்றாயிற்று. உடலை இழுத்துக்கொண்டு மனம்  ஓடிற்று  என்று
உரைத்தவாறு     மென்பூப்போன்ற       அவர்கள்       பாதங்கள்
அசைவதற்குரியன;  ஓடுதற்குரியன    அல்ல;  ஓடுவதனால் தள்ளாடின
என்பார். “மென்பூத்தள்ள” என்றார்.                            3