உலாவியற் படலம் - 1149

bookmark

1149.    

விரிந்து வீழ் கூந்தல் பாரார்;
   மேகலை அற்ற நோக்கார்;
சரிந்த பூந் துகில்கள் தாங்கார்;
   இடை தடுமாறத் தாழார்;
நெருங்கினர்; நெருங்கிப் புக்கு.
   ‘நீங்குமின். நீங்குமின்’ என்று. -
அருங் கலம் அனைய மாதர் -
   தேன் நுகர் அளியின் மொய்த்தார்.
 
அருங்கலம்   அனைய மாதர்- (அந்த மிதிலை நகருக்கு) அரிய
அணிகலம்  போன்று  அழகு  ஊட்டும் மகளிர்; விரிந்து வீழ் கூந்தல்
பாரார்   -   (கூட்டத்தால்  நெருக்குண்டு)  விரிந்து  வீழ்கின்ற  தம்
கூந்தலைப் பொருட்படுத்தார்; மேகலை அற்ற நோக்கார் - (இடையில்
அணிந்துள்ள)      மேகலைகள்       அற்று      வீழ்ந்தனவற்றைப்
பொருட்படுத்தார்;  சரிந்த  பூந்துகில்கள்  தாங்கார்  -  பூப்போன்ற
மெல்லிய  ஆடைகளின்  இடையிலிருந்து சரிவதைப்பிடித்து    ஏந்தவும்
கருதார்; இடை  தடுமாறத்  தாழார் நெருங்கினர்- தங்கள் நுண்ணிய
இடைகள்   (ஆற்றாது)   நிலைதளர்வது  கண்டு  சிறிதும்  தாழாமல்.
(இராமபிரானை) நெருங்கினார்   ஆகிய   மகளிர்;    நெருங்கிப்புக்கு
நீங்குமின்    நீங்குமின்   என்று- நெருங்கிய   வாறே   நுழைந்து
வழிவிடுங்கள்.  வழிவிடுங்கள்  என்று  கூறிய  வண்ணமே;  தேன்நுகர்
அளியின்  மொய்த்தார் - தேன்பருகத் துடிக்கும் வண்டுகளைப்போல.
(இராமபி ரானை) மொய்த்தனர்.

“செவிக்குத்தேனா”கிய  (கம்ப.   4966)   இராமபிரான் கண்ணுக்கும்
தேனானான்;காணவந்த மகளிர் உண்ண வந்த வண்டானார் என்க.

இராமன்     அழகெனும்   தேனைப்பருக வந்த மகளிர். ஒருவர்க்கு
ஒருவர்  இடித்துக்கொண்டு  நெருக்கியவாறு   முந்துதலால்.  கூந்தல்கள்
சரிந்தன;  மேகலைகள்  அற்றன;   மெல்லிடைகள் நெளிந்தன என்றார்.
உள்ளம்   ஒன்றில்   தோய்ந்து  விட்டால்.   உடலும்  உடல்  சார்ந்த
பொருள்களும்  ஒரு  பொருட்டாகக் கவனம்   பெறுவதில்லை என்னும்
உளவியல்   தத்துவத்தை.  இராமன்கோலம்   காண  வந்த  மகளிரின்
அலங்கோலம் கொண்டு விளக்கியுள்ள திறம் காண்க.               2