உண்டாட்டுப் படலம் - 1113

bookmark

மதியம் மறைதலும் இரவி எழுதலும்

சந்திரன் மறைவும் சூரியன் தோற்றமும்
 
1113.

கடை உற நல் நெறி காண்கிலாதவர்க்கு
இடை உறு திரு என. இந்து நந்தினான்.
படர் திரைக் கருங் கடல் பரமன் மார்பிடைச்
சுடர் மணிக்கு அரசு என. இரவி தோன்றினான்.
 
நல்நெறி கடையுறக் காண்கிலா தவர்க்கு- புண்ணியச் செயல்களை
முடிவு  வரை  முற்றச் செய்யாதவர்கட்கு; இடை உறு திருவென இந்து
நந்தினான்  -  நடுவே (சில காலம்  சேர்ந்திருந்த) செல்வம் (இடையே)
அழிவது  போல்  சந்திரன்  மறைந்தான்;  பரமன்  மார்பிடை  சுடர்
மணிக்கு  அரசு என - பரம்பொருளாகிய திருமாலின் மார்பினிடையே
ஒளிர்கின்ற.  மணிகளுக்குள்    அரசாகிய   கவுத்துமணி  (தோன்றுவது)
போல; படர்திரைக்  கருங்கடல்  இரவி  தோன்றினான்  -  பரவிய
அலைகளையுடைய கரிய கடலிடையே சூரியன் தோன்றினான்.

நெறி:     நெறி    காட்டும்  புண்ணியச்  செயல்களைக்  குறித்தது;
ஆகுபெயர்.  இறுதி  வரை   நற்செயல்களைக் கடைப்பிடியாது போவார்
வாழ்க்கை   இருள்   சூழும்    என்பதாயிற்று.    தற்குறிப்பேற்றுதலில்
தனக்குரிய  தனித்துவத்தை   இப்பாடலிலும்  கவிஞர்பிரான் ஏற்றியுள்ள
எழில் கண்டு மகிழ்க. திருமால் மார்பில் உள்ளது  கவுத்துவ  மணி  தன்
அருகில்  உள்ள  திருமகளாம்   சீதையெனும்  பெண்மணியை  மணக்க
உள்ள காலமும் அருகில்  உள்ளதென  நினைப்பித்தவாறு. சுடர்மணிக்கு
அரசு - கவுத்துவ மணி.                                      67