உண்டாட்டுப் படலம் - 1111

bookmark

காதலர் புல்லிக் கிடந்தமை

1111.

வட்ட வாள் முகத்து ஒரு மயிலும். மன்னனும்.
கிட்டிய போது. உடல் கிடைக்கப் புல்லினார்;-
விட்டிலர்; கங்குலின் விடிவு கண்டிலர்;-
ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால்-
 
வட்டவாள்     முகத்து  ஒருமயிலும்  மன்னனும் - வட்டமாகிய
ஒளிமுகமுடைய   ஒரு  மயில்   போன்றாளும்   (அவள்)   கணவனும்;
கிட்டிய  போது  உடல் கிடைக்கப் புல்லினார் - (ஒருவர்க்கொருவர்)
நெருங்கியபோது.  கிடைக்க  (இறுகத்   தழுவ   ஏற்ற  வாய்ப்பொன்று)
கிட்டியதனால்  தம்  உடல்  இறுகத் தழுவினர்; ஒட்டிய உடல் பிரிப்பு
உணர்கிலாமையால்   -   (ஒன்றாக)  ஒட்டிக்  கொண்ட  உடல்களை.
(இரண்டாகப்)  பிரிக்க  அறிய  மாட்டாமையால்; விட்டிலர்; கங்குலின்
விடிவு  கண்டிலர்  -  தழுவிய  கரங்களை விடாதவர் ஆயினர்; இரவு
விடிந்து போனதையும் அறியாதவர் ஆயினர்.

ஒன்று  தெரிந்து  ஒன்று தெரியாமையால் உற்ற இடர் உரைத்தவாறு.
தழுவத்தெரிந்தது;  விடத்   தெரியவில்லை.  இரவு விட்டதும் தெரியாது.
தழுவல்  விடாமற்  கிடந்தனர்  என்பார். “விட்டிலர்  கங்குலின் விடிவு
கண்டிலர்”  என்றார்.  “குக்கூ என்றது கோழி; அதன்  எதிர்  துட்கென்
றன்றென்  தூய  நெஞ்சம்”  (குறுந்.  157)  எனக்   காதலர்  விடியலை
விரும்பாமை கூறப்படும். “காதலற் பிரியாமல் கவவுக்கை    நெகிழாமல்”
(சிலம்பு. 1: 61-62)      வாழும்        வகை      இது.      வீழும்
இருவர்க்கு வழியிடைப் போழப் படா முயக்கு இனிது  (திருக்)  என்பார்
வள்ளுவனாரும்.                                           65