உண்டாட்டுப் படலம் - 1106
ஒருத்தி தன்னை அரம்பை மாதோ என்று ஐயுறச் செய்தமை
1106.
பால் உள பவளச் செவ் வாய்.
பல் வளை. பணைத்த வேய்த் தோள்.
வேல் உள நோக்கினாள். ஓர்
மெல்லியல். வேலை அன்ன
மால் உள சிந்தை ஆங்கு. ஓர்
மழை உள தடக் கையாற்கு.
மேல் உள அரம்பை மாதர்
என்பது ஓர் விருப்பை. ஈந்தாள்.
பால் உள பவளச் செவ்வாய் - பால் போன்ற சுவையும் பவளம்
போன்ற சிவந்த நிறமும் உடைய வாயினையும்; பல்வளை. பணைத்த
மென்தோள் - பல்வகை வளையல்கள் (அணிந்த கைகளையுடைய)
பெருத்த தோள்களையும்; வேல் உல நோக்கினாள் ஓர் மெல்லியல்-
வேலினையொத்த விழிகளையுமுடைய ஒரு மெல்லியலாள்;
வேலையன்ன மால் உள சிந்தையின் - கடல் அனைய காதல் மனம்
கொண்டவனும்; ஓர் மழை உள தடக்கையாற்கு - (கைம்மாறு கருதாது
கொடுப்பதனால்) மேகத்தை ஒத்து நீண்ட கைகளையுடையவனான
ஒருவனுக்கு; மேல்வினை அரம்பை மாதர் என்பதோர் விருப்பை
ஈந்தாள் - வான் உலகில் உள்ள அரம்பை மாது இவள் என்று
கருதத் தக்க பேரின்பத்தினை அளித்தாள்.
கறையற்ற காதல். வானகத்து இன்பத்தை எல்லாம் மண்ணுக்குக்
கொண்டு வரவல்லது என்றபடி. “வேலையன்ன மால்” என்பது
கடலன்ன காமம் (திருக். 1137) எனும் குறட்பகுதியோடு ஒத்தது.
வானுலக இன்பத்தை வையகத்தே தந்ததாலும் குன்றாது
கொடுத்ததாலும். அவள் விண்ணுலக அரம்பை ஆயினாள். 60
