உண்டாட்டுப் படலம் - 1100
ஒருத்தி பிரிவாற்றாமையைத் தோழிக்குக் குறிப்பாலுணர்த்தல்
1100.
‘ஆர்த்தியும். உற்றதும்.
அறிஞர்க்கு. அற்றம்தான்
வார்த்தையின் உணர்த்துதல்
வறிது அன்றோ?’ என
வேர்த்தனள்; வெதும்பினள்;
மெலிந்து சோர்ந்தனள்;
பார்த்தனள். ஒருத்தி தன்
பாங்கு அனாளையே.
ஆர்த்தியும் உற்றதும் அற்ற(மும்) - (தனக்கு நேர்ந்துள்ள) காம
நோயும் (அதன் பின்) விளைவுகளும் (இவ்விரண்டால் எழுந்ததுள்ள
உடல் உள) குறைகளும்; அறிஞர்க்கு வார்த்தையின் தான்
உணர்த்துதல் வறிது அன்றோ? எனா - (குறிப்பால் உணரவல்ல)
குறைகளும் அறிஞர் ஆயினோர்க்கு வாய்மொழியால் தானே சென்று
உரைத்து விளக்குவது வீண் அன்றோ? என்று கருதி; வேர்த்தனள்;
வெதும்பினள் மெலிந்து சோர்ந்தனள் - (தோழிக்குத் தன் துயர்களை
வாயால் உரையாது) உடல் வெயர்த்து மனம் வெதும்பி மிக வாடிச்
சோர்ந்து (அணையில்) சாய்ந்தாள்; தன் பாங்கு அனாளைப்
பார்த்தனள் - (என் நிலை கண்டும். கணவனை வருவித்தற்குரிய
வழிதுறை நாடாமல் வாளா இருத்தியோ? எனும் குறிப்போடு) தன்
அருகுள்ள தோழியை (ஏக்க விழிக்ளோடு) பார்த்தாள்.
குறிப்பால் உணரும் திறம் குறித்துக் கவிஞர்க்கு உள்ள விருப்பமும்
மதிப்பும் இப்பாடலிலும் இலங்கல் காணலாம். தோழியைக் குறிப்பால்
உணரவல்ல அறிவுத் திறமுடையவளாகத் தலைவி கருதும் பாங்கு
இங்குத் தெளிவாம். 54
