உண்டாட்டுப் படலம் - 1096
தனியே வந்த தோழி தாயை ஒத்தாள் எனல்
1096.
துனி வரு நலத்தொடு சோர்கின்றாள். ஒரு
குனி வரு நுதலிக்கு. கொழுநன் இன்றியே
தனி வரும் தோழியும். தாயை ஒத்தனள்-
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே.
துனி வருநலத்தொடு சோர்கின்றாள் ஒரு குனி வரு நுதலிக்கு -
ஊடலால் வரும் இன்பத்தை எண்ணிக் (கணவன் வந்த போது
வெகுண்டு. அவன் சென்ற பின்பு அவன் சென்றதற்கு) வருந்திச்
சோர்பவளாகிய வளைந்த நெற்றியுடையாள் ஒருத்திக்கு; கொழுநன்
இன்றியே தனி வரும் தோழியும் - (தூதாகப் போய்) கணவன்
இல்லாமல் தனித்து வரும் தன் (உயிர்த்) தோழியும்; இனி வரும்
தென்றலும் இரவும் என்ன - (தனியே இருக்கும் இவளை
வருத்துதற்கு) இனிமேல் வரும் தென்றலையும் இரவையும் போல;
தாயை ஒத்தனள் - (இடித்துரை கூறி இவளை இரவெல்லாம் வருத்த)
இவள் தாயைப் போன்றவள் ஆயினாள்.
“காமம் புணர்தலின் ஊடல் இனிது” (திருக். 1326) ஆதலின். “துனி
வருநலத்தை” விரும்பினாள். உப்பினைப் போன்ற (திருக். 1302) அது.
சிறிது மிகினும் கசப்பைத் தந்து விடுமாதலின் இக் “குனிவரு நுதலி
சோர்கின்றாள்” என்க. பிரிவில் வருந்துவார்க்கு. தென்றல். இரவு.
தோழி. தாய் - நால்வரும் சமமாகத் துன்பம் தருவர் என்றபடி. 50
