இராமலிங்க அடிகள்

இராமலிங்க அடிகள்

bookmark

வாழ்க்கை வரலாறு

பிறப்பு :

இராமலிங்க அடிகள் அவர்கள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகனாக இறைவன் அருளால் பிறந்தார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக்கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப்படுகிறது.

திருவருட்பா :

திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஓர் அருள் ஞானக்களஞ்சியம் ஆகும். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்படையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விஷயங்களை எல்லாம் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.

சமரச சுத்த சன்மார்க்கம் :

நாம் யார்? நம் நிலை எப்படிப்பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார் வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் ஏற்படுத்தப்பட்டதே ‘சமரச சுத்த சன்மார்க்கம்’. பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றாலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ஆண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் ஏற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும்.

அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை வணங்கினான். வணங்கிக் கொண்டும் உள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் பலவற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனான். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் ஏற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும். மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்கமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்.

ஒளி நெறி மார்க்கம் :

பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். அதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் மூடப்பட்டு இருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்ற வேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஒளி நெறி மார்க்கமாகும்.

திருவருட்பா பாடல்கள் :

வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும், புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளொளி பெருக்கும்.

இறப்பு :

வள்ளலார் அவர்கள் இறுதியாக நிறுவிய அமைப்பு 1872ம் ஆண்டு ‘சத்திய ஞானசபை’ ஆகும். வள்ளலார் ஜனவரி 30, 1874ம் ஆண்டு ஜீவசமாதி அடைந்தார்.