இராசராச சோழன் (கி.பி 985-1014)

bookmark


பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராசராச சோழன் மன்னனானான். இவனுக்கு அருள்மொழிவர்மன், ரிசிவர்மன் என்று பெயர்கள் வழங்கப் பட்டதாக அழகர் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியப்படுகிறது. இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன.

காந்தளூர்ச் சாலை

இவற்றுக்காக இராசராசன் நடத்திய போர்கள் பல. சேரர், பாண்டியர், சிங்களவர், ஒன்று கூடி காந்தளூர்ச் சாலை என்ற இடத்தில் சோழரை எதிர்த்தனர். இப்போரில் சேர மன்னன் பாசுகர ரவிவர்மனைத் தோற்கடித்தான். சேர மன்னனுடைய கப்பற்படையை அழித்து உதகை, விழிஞம் ஆகிய பகுதிகளையும் வென்றான். இப்போரில், சேரருக்கு உதவுவதற்காகச் சென்ற பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனை வென்று, இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத் தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. கொல்லம் சென்று சேரனுடன் இரண்டாவது முறைப் போர் புரிந்து சேர நாட்டின் எஞ்சிய பகுதிகளையும் வென்றான்.

கங்கபாடி, நுளம்பாடி

சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து கங்கபாடியைக் (மைசூரின்தென்பகுதியும் சேலம் மாவட்டத்தில் வட பகுதியும் அடங்கிய நாடு) கைப்பற்றினான். தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு கங்கர்கள் இந்நாட்டை ஆண்டனர். மைசூர் நாட்டின் கீழ்ப்பகுதியும் பல்லாரி மாவட்டமும் கொண்ட நுளம்பாடியைப் பல்லவர்களின் வம்சத்தவராகிய நுளம்பர்களுடன் போரில் வென்று இப்பகுதியைக் கைப்பற்றினான். இப்போர்களில் தலைமை ஏற்று நடத்தியவன் இராசராசனின் மகனான முதலாம் இராசேந்திரன் ஆவான். சாளுக்கிய நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். துளுவர், கொங்கணர், தெலுங்கர், இராட்டிரகூடர் ஆகியோரை வென்று வடக்கே வங்காளம் வரை இவனது படைகள் சென்று போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

ஈழத்துப் போர்

இராசராசன் வலிமை மிக்கக் கடற்படையைக் கொண்டு இலங்கையை வென்றான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய ஈழம் 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது. இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரம் போரில் அழிந்தது. 'சனநாத மங்கலம்' என்று புதிய பெயர் சூட்டப்பட்டு 'பொலன்னருவை' ஈழத்தின் புதிய தலைநகராயிற்று. இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின் பெயர் ராசராச பெரும்பள்ளி. ராசராசசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரை அக்காலத்தில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இராசேந்திரன் 'வானவன் மாதேச்சுரம்' என்ற பெயரில் இங்கு கற்றளி எடுத்தான். ஈழ மண்டலத்தில் உள்ள சில ஊர்களைத் தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு நிவந்தமாக அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள முந்நீர்ப் பழந்தீவு எனப்படும் இலட்சத்தீவுகள் மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்காசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.