இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் ஒரு பார்வை

bookmark

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகம் "முதல் இந்திய விடுதலைப் போர்" எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்கு முன்னரே பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன. அதில் முதன்மையாக தமிழகத்தில் பாளையக்காரர்கள் என்னும் ஒரு சாரார் ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து நின்றனர். யார் இந்த பாளையக் காரர்கள் வாருங்கள் பார்ப்போம்.

பாளையக்காரர்களின் எதிர்ப்பு:-

மதுரை நாயக்க மன்னர்களுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக கப்பத்தொகையினை செலுத்தி வந்த பாளையக்காரர்கள், மற்றும் மறவர்கள் மதுரை நாயக்க மன்னர்களின் மறைவிற்குப் பிறகு கப்பம் கட்ட மறுத்தனர். எனவே ஆற்காடு, மதுரை உள்ளிட்ட அரசுகள் நவாப்பின் ஆட்சிக்குட்பட்ட போது கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் தன்னாட்சி புரிந்து வந்த இவர்கள், கட்டுப்பட்டு கப்பம் செலுத்த மறுத்தனர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க நவாப்புக்குப் படை உதவி செய்த ஆங்கிலேயர்களுக்கு நவாப், கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இது பெரும் கடன்தொகையாக மாறவே இப்பகுதிகளில் எல்லாம் வரி வசூல் செய்யும் உரிமையை கம்பனியார் பெற்றனர். இதனை பூலித்தேவன், கட்டபொம்மன் உள்ளிட்ட பலர் எதிர்த்தனர்.

பூலித்தேவன்:-

நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பூலித்தேவன் மற்றும் பூலித்தேவரின் சுற்று வட்டார பாளையங்களைச் சேர்ந்த வாண்டாயத்தேவன் போன்றவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகச் செயல்பட்டனர்.

1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்று அறிவித்தார். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றார் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது. பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பின்னர் 1755 -ல் கப்பம் வசூலிக்க வந்த ஆங்கிலத் தளபதி அலெக்சாண்டர் கெரான் என்பவரோடு போரிட்டு வெற்றி பெற்றார் பூலித்தேவன். இதுவே பாளையக்காரர்கள் - ஆங்கிலேயர் மோதல்களில் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட முதல் தோல்வியாகும். மேலும் பூலித்தேவன் 1750 முதல் 1767 வரை சுமார் 17 ஆண்டு காலம் தொடர்ந்து பல போர்களை நடத்திவந்தார்.

இதே போல தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்த நமது தமிழக ஜான்சி ராணி தான் வேலு நாச்சியார்.

வேலு நாச்சியார்:-

ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பனியின் கூட்டுப் படையினரிடமிருந்து, 1780-இல் , தனது பிரதானி தாண்டவராயப் பிள்ளையின் ஆலோசனையின் படி மருது சகோதரர்களின் உதவியோடும் கும்பினி (பிரிட்டிஷ் கம்பெனி) எதிர்ப்புப் படை ஒன்றை அமைத்து சிவகங்கையை மீட்டவர் வேலுநாச்சியார்.

முத்துராமலிங்க சேதுபதி:-

இருபது ஆண்டுகளுக்கு மேலாக கப்பத் தொகையினை யாருக்கும் கட்டாமல் தன்னிச்சையாக இயங்கி வந்த இராமநாதபுரம் சேதுபதியை ஆயுத வலிமை கொண்டு அடக்கிட நாவாப் விரும்பினார். 1772-ல் நவாப் முகமது அலியின் மகனான உம் தத்துல் உம்ரா, கம்பனித் தளபதி ஜோசப் ஸ்மித் ஆகியோர் தலைமையில் பெரும்படை ஒன்று இராமநாதபுர கோட்டையைக் கைப்பற்றின. அங்கிருந்த ராணி, அவரது இரு பெண் குழந்தைகள் இளவல் முத்துராமலிங்க சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக 1781-ல் நாவாப் சிறையிலிருந்த இளம் சேதுபதி மன்னருடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு இராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர் தமது ஆட்சியைத் தொடர வழி கோலினார். சேதுபதி திருவிதாங்கூர் மன்னர் மற்றும் திருநெல்வேலிப் பாளையக்காரர்களுடன் நட்புகொண்டார். மேலும் நவாபுக்கும் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் எதிராக டச்சுக்காரர்களுடனும் உடன்பாடு செய்துகொண்டார்.

ஆற்காடு நவாப்பின் இறையாண்மைக்கு உட்பட்ட நிலையில் அவரது சலுகைகளை எதிர்பார்த்து தங்களது வணிகத்தைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் சேது நாட்டின் வணிகத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்றனர். ஆனால் சேதுபதி மன்னர் மறுத்தார். எனவே பலவகையில் முயன்று ஆற்காட்டு நவாப்பிற்கும், ஆட்சியர் பவுனிக்கும் முறையிட்ட கம்பனியர் போர் தொடுக்க இரகசியத் திட்டம் தீட்டினர். மன்னருக்கு மிகவும் நம்பிக்கையான தளபதி மார்ட்டினிடம் கோட்டை வாசல் கதவுகளுக்கான சாவிகள் இருந்தன. அந்தக் கிறிஸ்துவத் தளபதி ஆங்கிலேயர்களிடம் மன்னரை காட்டிக் கொடுத்து விட்டான். அதனால், 1795 பிப்ரவரி எட்டாம் நாள் கம்பெனியாரது படை இராமநாதபுரம் கோட்டை வாயிலைக் கடந்து அரண்மனையைச் சூழ்ந்து கொண்டது.

ஆயுதக் கிடங்கு, வெடிமருந்து இருப்பு, போர்வீரர் எண்ணிக்கை மற்றும் நாட்டுப் புறங்களில் பயிற்சிபெற்ற நாலாயிரம் போர் வீரகள், ஆயுதம் ஏந்தக் கூடிய ஆறாயிரம் குடிமக்கள் ஆகியோர் இருந்தும் மன்னர் வஞ்சகமாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டார். மன்னரது தளபதி மயிலப்பன் சேர்வைக்காரன் என்பவர் மன்னரைத் தப்புவிக்கும் முயற்சியில் தோல்வியடைந்த பின் மக்களைத் திரட்டி ஆயுதக் கிளர்ச்சியொன்றைத் தொடங்கினார். முதுகுளத்தூர், அபிராமபுரம், கமுதி ஆகிய ஊர்களிலுள்ள கம்பெனியாரது தானியக் களஞ்சியம், கிடங்குகள் ஆகியன சூறையாடப்பட்டன இப்புரட்சியில், குளத்தூர், காடல்குடி, நாகலாபுரம், பாஞ்சலங்குறிச்சி மக்களும் கலந்துகொண்டனர். நாற்பத்து இரண்டு நாட்கள் நீடித்த இப்புரட்சி கம்பெனியாரது ஆயுத பலத்தினால் ஒடுக்கப்பட்டது. மன்னர் சேதுபதி திருச்சி சிறையிலிருந்து நெல்லூர் சிறைக்கு மாற்றப்பட்டர். அங்கு கொடுமைதாளாது, இரவுபகல் தெரியாமல் பதினான்கு ஆண்டுகள் கழித்தார். குற்றாச்சாட்டுகள், விசாரணைகள் என எதுவுமே இல்லாமல் தமது வாழ்நாளைச் சிறையில் கழித்த சேதுபதி மன்னர் 1809-ல் இறந்தார்.