ஆற்றுப் படலம் - 25

bookmark

வைய மன்னர்தம் வான்படை போல
வெய்ய பாலையிற் சரயுநீர் விரைதல்

வெள்ளம்; சேனை
 
25.

எயினர் வாழ்சீறூர் அப்பு
   மாரியின் இரியல் போக்கி,
வயின் வயின், எயிற்றி
   மாதர், வயிறு அலைத்து ஓட, ஒட்டி,
அயில்முகக் கணையும் வில்லும்
   வாரிக்கொண்டு, அலைக்கும் நீரால்,
செயிர் தரும்கொற்ற மன்னர்
   சேனையை மானும் அன்றே.                 
 
எயினர்     வாழ் சீறூர் -  (சிறிய ஊரில் வாழ்கின்ற வேடர்களை
(மக்களை);  அப்பு  மாரியின்- அம்பு  மழையால்;  இரியல் போக்கி-
ஓடச்  செய்தும்; வயின் வயின்- எல்லா இடங்களிலும்; எயிற்றி மாதர்-
வேடுவப் பெண்கள்; வயிறு அலைத்து  ஓட ஒட்டி-வயிற்றில் அடித்துக்
கொண்டு ஓடும்படி விரட்டியும்; அயில்முகக்  கணையும் - கூர்மையான
முனை    கொண்ட    அம்புகளையும்;     வில்லும்-   விற்களையும்;
வாரிக்கொண்டு-வாரி வந்து; அலைக்கும் நீரால்- அலையச் செய்கின்ற
தன்மையால்; (சரயுவின் வெள்ளம்)  செயிர் தரும் கொற்ற மன்னர்-
போர் செய்து வெற்றி பெற்ற உரிய மன்னர்களின்; சேனையை மானும்-
படையைப் போன்றது.

அப்பு     மாரி;    அம்பு  மழை என்னும் போது அப்பு வலித்தல்
விகாரம்;  வெள்ளத்தைக்    குறிக்கும்போது  அப்பு:  நீர்  (வட சொல்).
அப்பு  மாரி;  உருவகம்.    சிலேடை. செயிர் அறும் கொற்றம் என்னும்
பாடம்; குற்றமற்ற வெற்றி என்று பொருள். அன்று, ஏ அசைகள்.     14