ஆற்றுப் படலம் - 17

bookmark

வரையினின்றிழியும் விரைபுனல் தோற்றம் (17-22)

வெள்ளம் விலைமாதரை யொத்தமை

விலை மகளிர் : வெள்ளம்
 
17.

தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன்
நிலை நிலாது, இறை நின்றது போலவே,
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையின் மாதரை ஒத்தது - அவ் வெள்ளமே.
 
தலையும் ஆகமும் தாளும் தழீஇ-(தம்மிடம் வரும்     காமுகரின்)
தலை, உடல்,  கால்கள்   முதலியன  எல்லா  உறுப்புகளையும்  தழுவி;
அதன்   நிலை நிலாது - (புறத்தளவில்  போலியான   விருப்பத்தைக்
காட்டும்)  அவ்வளவோடு அன்றி:  இறை நின்றது  போல - சிறிதளவு
காலமே  விரும்பியிருந்தது   போல;   மலையில்   உள்ள   எலாம்
கொண்டு- மலையின்  உச்சி,  நடுவிடம், அடிவாரம் ஆகிய  பகுதிகளில்
உள்ள     எல்லாவற்றையும்   வாரிக்கொண்டு   மண்டலால்- விரைந்து
போதலால்;  அவ்  வெள்ளம்-சரயுவில்  பெருகிய  அந்த   வெள்ளம்;
விலையின் மாதரை ஒத்தது-விலைமகளிரை ஒத்திருந்தது. 

சரயு     நதியில் வெள்ளம் விலை மாதரை ஒத்தது என்பது கருத்து.
இக்   கருத்தினைச்   சிலேடையோடு   உவமையணியைச்     சேர்த்து
வழங்குகிறார்,    கவிச்சக்கரவர்த்தி.    ‘விலை    மாதர்     காமுகரது
பொருள்களைக்  கவருமளவும்  அவர்களைத் தழுவிக்     காண்டிருந்து,
கவர்ந்தவாஎறே   விரைவில்  விட்டு  நீங்குதல்  போல,    வெள்ளமும்
மலையில்  உள்ள  பொருள்களை  யெல்லாம் வாரிக்   கொள்ளுமளவும்
மலையைத்  தழுவிக்  கொண்டிருந்தது.  வாரிக் கொண்டவாறே   விட்டு
நீங்கிற்று’ எனச் சிலேடை விளக்கம் தருவர் காஞ்சி இராமசாமி நாயுடு.
இது செம்மொழிச் சிலேடை.

தழீஇ-சொல்லிசை   அளபெடை.    நிலாது,    எலாம்    என்பன
இடைக்குறை.                                               6