ஆறு செல் படலம் - 2366
2366.
அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன்
விதி வரும் தனிக்குடை மீது இலாப் படை
பொதி பல கவிகை மீன் பூத்தது ஆகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே.
அதிர் கடல் - ஒலிக்கின்ற கடலாற் சூழப்பெற்ற; வையகம்
அனைத்தும் - உலகம் முழுவதையும்; காத்தவன் - (நீதி வழுவாது)
காப்பாற்றிய தயரதசக்கரவர்த்தியின்; விதிவரு - மரபுவழியில்
பாரம்பரியமாக வருகின்ற; தனிக்குடை- ஒப்பற்ற வெண்கொற்றக்குடை;
மீது இலா - மேலே பிடிக்கப்படாது உள்ள; படை- அச்சேனை;
பொதி பல கவிகை மீன் - நெருங்கிய பலவாகிய (மற்றை மன்னர்களின்)
வெண்குடைகளாகிய விண்மீன்கள்; பூத்தது ஆகிலும் - வானம் எங்கும்
நிரம்பித்தோன்றின ஆயினும்; கதிர் மதி - ஒளியுடைய சந்திரன்;
நீங்கிய கங்குல் - இல்லாத இரவை; போன்றது -.
மன்னர்கள் குடைக்குத் தாரகைகளும், சக்கரவர்த்தியின் வெண்கொற்றக்
குடைக்குச்சந்திரனும் உவமையாம். விண்மீன்கள் பூத்திருப்பினும் சந்திரன்
இல்லாத ஆகாயம்பொலிவழிந்திருத்தல் போல, வெண்குடைகள் பல
நடுவே தோன்றினும், சக்கரவர்த்தியின்வெண்கொற்றக் குடை இல்லாமையால்
சேனை பொலிவழிந்து தோன்றிய தென்க. விதி - முறைமை.இங்கே மரபு
வழியில் சூரிய குலத்தார்க்கு உரியதாய் வருவது. ‘கவிகை மீன்’
உருவகம். ‘ஏ’காரம்ஈற்றசை. 35
