ஆறு செல் படலம் - 2362
2362.
வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்தென,
அண்ணல் வெங்கதிரவன், அளவுஇல் மூர்த்தி ஆய்,
மண்ணிடை இழிந்து ஒரு வழிக்கொண்டாலென,
எண்ண அரு மன்னவர் களிற்றின் ஏகினார்.
எண்ண அரு மன்னவர் - கணக்கிட முடியாத அரசர்கள்; அண்ணல்
வெங் கதிரவன்- பெருமை பொருந்திய வெப்பமுள்ள ஒளிக்கதிர்களை
உடைய சூரியன்; அளவு இல் மூர்த்திஆய் - அளவுபடாத பல
வடிவங்களை எடுத்துக்கொண்டு; மீ வெண்மதி செல - தன்மேலே
வெண்மதியானது சென்றுகொண்டிருக்க; மேகம் ஊர்ந்து - (தான்)
மேகத்தின் மேல்ஊர்தியாக ஏறி; மண்ணிடை இழிந்து - பூமியில் இறங்கி;
ஒரு வழிக் கொண்டால் என- ஒரேவழியில் பயணம் செய்தாற் போல;
களிற்றின் ஏகினார் - (வெண்குடைநீழலில்) யானைமேல் சென்றார்கள்.
பலவடிவு கொண்ட சூரியன் பல மன்னர்களுக்கும், மேல் செல்லும்
வெண்மதி மன்னர்மேல்நிழற்றிய வெண்குடைக்கும், மேகம் ஏற்றிச் செல்லும்
யானைக்கும் உவமையாயின, சூரியன்மண்ணில் இறங்கல் இல்லையாதலின்
இது அற்புதஉவமையணியாகும். 31
