ஆங்கிலப் பயிற்சி
நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
நேரு மாறெனை எந்தை பணித்தனன்;
புல்லை யுண்கென வாளரிச் சேயினைப்
போக்கல் போலவும்,ஊன்விலை வாணிகம்
நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
நாடு விப்பது போலவும்,எந்தைதான்
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை
ஆரி யர்க்கிங் கருவருப் பாவதை, 21
நரியு யிர்ச்சிறு சேவகர்,தாதர்கள்,
நாயெ னத்திரி யொற்றர்,உணவினைப்
பெரிதெ னக்கொடு தம்முயிர் விற்றிடும்
பேடியர்,பிறர்க் கிச்சகம் பேசுவோர்,
கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங்
கலைப யில்கென என்னை விடுத்தனன்,
அருமை மிக்க மயிலைப் பிரிந்துமிவ்
அற்பர் கல்வியின் நெஞ்சுபொ ருந்துமோ? 22
கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்;
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்;
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்;
துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
சொல்லு வாரெட் டுணைப்பயன் கண்டிலார். 23
கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதை புனைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்த ளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும், 24
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்துத் தர்மம் வளர்த்ததும்,
பேர ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழை படாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும், 25
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்ருழல் பித்தர்கள்,
என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே! 26
சூதி லாத யுளத்தினன் எந்தைதான்
சூழ்ந்தெ னக்கு நலஞ்செயல் நாடியே
ஏதி லாதருங் கல்விப் படுகுழி
ஏறி யுய்தற் கரிய கொடும்பிலம்
தீதி யன்ற மயக்கமும் ஐயமும்
செய்கை யாவினு மேயசி ரத்தையும்
வாதும் பொய்மையும் என்றவி லங்கினம்
வாழும் வெங்குகைக் கென்னை வழங்கினன்.27
ஐய ரென்றும் துரைனென்றும் மற்றெனக்
காங்கி லக்கலை யென்றொன் றுணர்த்திய
பொய்ய ருக்கிது கூறுவன்,கேட்பீரேல்;
பொழுதெ லாமுங்கள் பாடத்தில் போக்கிநான்
மெய்ய யர்ந்து விழிகுழி வெய்திட
வீறி ழந்தென துள்ளநொய் தாகிட
ஐயம் விஞ்சிச் சுதந்திர நீங்கியென்
அறிவு வாரித் துரும்பென் றலைந்ததால். 28
செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது;
தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன;
நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்!
சிலமுன் செய்நல் வினைப்பய னாலும்நந்
தேவி பாரதத் தன்னை யருளினும்
அலைவு றுத்துநும் பேரிருள் வீழ்ந்துநான்
அழிந்தி டாதொரு வாறுபி ழைத்ததே! 29
