அவையடக்கம் - 7

bookmark

7.

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நன் மாச் செவிப்
பறை அடுத்தது போலும்-என் பாஅரோ. 
 

துறை  அடுத்த- பல்வேறு வகைப்பட்ட;    விருத்தத்   தொகைக்
கவிக்கு-செய்யுள்  தொகுதியாலாகிய   கவிதைக்கு;   உறை   அடுத்த
செவிகளுக்கு-இடமாக    உள்ள   செவிகளுக்கு; என்பா   ஓதில்-என்
கவிதைகளை ஓதினால்; யாழ் நறை அடுத்த-யாழிசை யாகிய  தேனைப்
பருகுகின்ற; அசுண நன் மாச்செவிக்கு-அசுணமாகிய நல்ல  விலங்கின்
செவிகளிலே;  பறை  அடுத்தது  போலும்-(கடுமையான)  பறையோசை
வீழ்ந்ததைப் போன்றது.

இசையில்    மகிழ்ந்து திளைக்கும் அசுணம், பறையின்  வல்லோசை
கேட்டால்   உயிர்  விட்டுவிடும்  என்பர்.  அதுபோல   ‘நற்கவிதைகள்
கேட்டுத்    திளைத்த   செவிகளில்   என்   புல்லிய   பாவின்  ஓசை
வீழ்ந்ததால் கேட்டோர் துன்புறுவர்’ என்கிறார் கம்பர்.

துறை:    பல பிரிவுகள்; அகத்துறை புறத்துறைகளைக்  குறித்ததாகக்
கொள்ளலாம்.   விருத்தம் என்பது ஒருவகை யாப்பு; அச்சொல்  இங்கே
பொதுமை    நிலையில்  எல்லா  வகைச்  செய்யுள்களையும்   குறித்து
வந்தது.   உறை:  இடம்.  ‘யாழ்’  -  இங்கு யாழில் பிறக்கும்  இசைக்கு
ஆகுபெயர்.     யாழ்    நறை-யாழிசையாகிய    தேன்;     உருவகம்.
விலங்காயினும்   இன்னிசையில் திளைப்பதால் ‘நன்மா’ என்றார்.  பறை
- ஆகுபெயராய் பறையோசையைக் குறித்தது. அரோ-அசை.         7