அலிபாபா கள்வர் குகையைப் பற்றி அறிதல்

அலிபாபா கள்வர் குகையைப் பற்றி அறிதல்

bookmark

பாரசீக நாட்டில் முன்னொரு காலத்தில் இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். மூத்தவன் பெயர் காசிம், இளையவன் பெயர் அலிபாபா. இவர்களது தந்தையான முகம்மது காலமான சமயத்தில் போதிய சொத்துக்களை சகோதரர்கள் இருவருக்கும் வைத்து விட்டுத் தான் சென்றார். அந்தச் சொத்துக்களை சகோதரர்கள் இருவரும் சமமாக பிரித்துக் கொண்டாலும், பேராசை கொண்ட காசிம் தந்திரமாக அலிபாபாவை ஏமாற்றி அத்தனை சொத்துக்களையும் எழுதி வாங்கிக் கொண்டான். காசிமின் இந்த செயலுக்கு அவனது மனைவியான ரசியா பேகமும் உடந்தை.

ரசியா பேகம் நல்ல வசதியான இடத்தில் இருந்து வந்த பெண். அதனால் காசிமிடம் ஏராளமான பணம் குவிந்து இருந்தது. இருந்தாலுமே அவன் அடுத்தவன் பணத்துக்கு அநியாயமாக ஆசைப் படும் மோசக்காரனாக இருந்தான். அது மட்டும் அல்ல ஏராளமான பணம் அவனிடத்தில் கொட்டிக் கிடந்தாலும் காசிம் கருமியாக இருந்தான். அத்துடன் பெண் பித்தனாகவும் காசிம் காணப்பட்டான்.

ஆனால், காசிமின் தம்பியான அலிபாபாவோ நற்குணங்களின் இருப்பிடமாக இருந்தான். ஏழை, எளிய மக்களுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்தான். இறை நம்பிக்கை அதிகம் கொண்டவன். பெண் ஆசை இல்லாதவன். அண்ணன் காசிம் தன்னை ஏமாற்றி இருந்தாலுமே கூட தினம், தினம் காசிமின் மனம் மாற வேண்டும். அவன் திருந்த வேண்டும் என்று இறைவனிடம் அலிபாபா வேண்டி வந்தான். அத்துடன் தன்மானத்துடன் விறகு வெட்டித் தனது பிழைப்பை நடத்தி வந்தான் அலிபாபா. தனது அண்ணன் பணக்காரனாக இருந்தாலுமே கூட அலிபாபா அவனது வீட்டு வாசலில் என்றுமே உதவி கேட்டு நின்றதில்லை.

அலிபாபா விறகு வெட்டி வந்த பணத்தில் ஒரு சிறு குடிலைக் கட்டிக் கொண்டான். மூன்று கழுதைகளை வாங்கிக் கொண்டான். இது தான் அலிபாபாவின் சொத்துக்கள். அத்துடன் தினம் விறகு வெட்ட அவன் காட்டிற்குச் செல்லும் சமயத்தில் விறகை சுமக்க அந்த மூன்று கழுதைகளையும் அலிபாபா உடன் அழைத்துச் செல்வான். இப்படித் தான் அவன் மிகவும் எளிமையாக வாழ்ந்து வந்தான்.

இப்படியாக அலிபாபா ஒரு நாள் விறகு வெட்ட காட்டிற்குச் சென்ற சமயத்தில் ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டான். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூசு மண்டலம் வானில் எழுந்ததை அவன் பார்த்தான். அந்த திசையை நோக்கிச் சென்றான். நாற்பது குதிரைகளில் அமர்ந்தபடி சிலர் அதிவேகமாக வந்து ஒரு குகையின் வாயிலில் நின்று கொண்டு இருப்பதைக் கண்டான். அவர்கள் "திறவாய் சிம் சிம்" என்று சொல்ல அந்தக் குகையின் பாறைகள் போன்ற அமைப்பு மெல்ல விலகி அந்தக் குகை மெல்லத் திறக்கத் தொடங்கியது. பிறகு அந்த நாற்பது வீரர்களும் எண்ணற்ற மூட்டைகளில் தங்கம், வைரம், அழகான உடைகள் எனப் பலதரப்பட்ட செல்வங்களை வைத்து இருந்ததை பார்த்தான் அலிபாபா. அத்துடன் அந்த நாற்பது பேரும் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருப்பதை கவனித்த அலிபாபா அவர்கள் பேச்சில் இருந்து அவர்கள் அனைவருமே எதற்கும் துணிந்த கொள்ளையர்கள் தான் என்று அறிந்து கொண்டான். அத்துடன் அவர்கள் அனைவரும் அந்தக் குகைக்குள் சென்றனர். அவர்கள் அவ்வாறு சென்ற மறு நிமிடம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்த அலிபாபா சத்தம் போடாமல், காலணிகளைக் கூட மறைவான இடத்தில் வைத்து விட்டு மெல்ல ஓடிச் சென்று புதர்களுக்கு ஊடே சென்று கொண்டு இருந்த ஒற்றை அடிப் பாதையில் தனது கழுதைகளையும் அனுப்பி விட்டு அங்கு நின்ற பெரிய மரம் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டான். அலிபாபாவால் அங்கு நடப்பவை எல்லாவற்றையும் தெள்ளத் தெளிவாகக் காண முடிந்தது.

இதற்கு இடையில் அந்தக் குகைக்குள் சென்றவர்கள் வெகு நேரம் கழித்துத் திரும்ப வெறும் கையுடன் வந்தார்கள். அதன் மூலம் கொள்ளையர்கள் நாற்பது பேரும் தம்முடன் கொண்டு வந்த கொள்ளை அடித்த பொருட்களை எல்லாம் அந்தக் குகையில் கொண்டு வைக்கத் தான் உள்ளே சென்று இருக்கிறார்கள் என்பதை அலிபாபா தெரிந்து கொண்டான். பிறகு அந்தக் குகையை விட்டு வெளியே வந்த கொள்ளையர்கள் "மூடுக சிம் சிம்" என்று சொல்ல அந்தக் குகை உடனே மூடிக் கொண்டது. அதன் பிறகு அவர்கள் எல்லோரும் தத்தமது குதிரைகளில் விரைந்து சென்றார்கள். முன்னே செல்பவன் தான் அந்தக் கூட்டத்தின்  தலைவனாக இருக்க வேண்டும் என்பதை அலிபாபா யூகித்துக் கொண்டான். அந்தக் கொள்ளையர்கள் அனைவருமே சென்று விட்டார்கள் என்பதை உறுதி செய்த பின்னர் தான் அலிபாபா மரத்தில் இருந்து இறங்கினான்.