அலாவுதீன் இளவரசியை சந்தித்தல்

bookmark

தினமும் காலையில் அலாவுதீன் தனது கடமைகளை எல்லாம் முடித்து விட்டு ஒழுங்காகத் தனது தொழிலை கவனிக்கத் தைய்யல் கடைக்குச் சென்றான். ஒழுங்காக எல்லோரும் போற்றும் விதத்தில் பொறுப்புடன் நடந்து வந்தான்.

அப்படித் தான் காலை வேளையில் ஒரு நாள் அவன் சென்று கொண்டு இருந்த சமயத்தில் மாளிகையில் இருந்து செய்தி அறிவிப்பவன் ஒருவன் பறை அடித்து இவ்விதம் கூறிக் கொண்டு சென்றான்.

"இது நமது சுல்தானின் அரண்மனையில் இருந்து அறிவிக்கப்படும் செய்தி. சுல்தானின் ஒரே மகளான சீமாட்டி பதர் அல்- புத்தூர் ஹம்மாவிற்கு (அக்காலத்தில் அரச குடும்பங்கள் மற்றும் செல்வந்தர்கள் சொகுசாக குளிப்பதற்காக கட்டி வைக்கப்பட்ட மண்டபம். அது அழகிய நீச்சல் குளத்துடன் காட்சியளிக்கும்) இன்னும் சற்று நேரத்தில் செல்லப் போகிறார். ஆகவே, வியாபாரிகள் அனைவரும் அவரவருடைய கடைகளைப் பூட்டி விட்டு அவரவர் வீடுகளிலேயே இருக்க வேண்டும். இதனை மீறி நடப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்"

இவ்விதமாக அறிவிப்பாளன் முரசு கொட்டி அறிவித்துச் சென்று விட்டான். அந்தச் செய்தியை கேட்ட மாத்திரத்தில் இளவரசியை ஒரு முறையேனும் நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை அலாவுதீனுக்கு வந்தது. அதனைத் தூண்டி விடும் விதத்தில் பொதுமக்களில் சிலர் அலாவுதீனின் காதில் படுமாறு இளவரசியின் அழகையும், வனப்பையும் பற்றி எடுத்துக் கூறினார்கள். அதனால் என்ன ஆனாலும் சரி, இன்று இளவரசியைப் பார்த்து விட்டுத் தான் போக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான் அலாவுதீன்.

பதுங்கிப் பதுங்கி சென்று குளியல் கட்டடத்திற்குப் பக்கத்தில் இருந்த மரத்தடிக்குச் சென்று மறைந்து நின்று கொண்டான் அலாவுதீன்.

"அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானதால் சாமான்ய மக்கள் நடமாட மாட்டார்கள். மரண தண்டனை அடைவதற்கு அவர்களுக்கு என்ன பைத்தியமா? எனவே, அந்தச் சமயத்தில் தெருக்களில் யாரும் நடமாட மாட்டார்கள்" என்று அலட்சியமாக இருந்தார்கள் காவலர்கள். எனவே, அவர்கள் கொஞ்சம் மெத்தனமாக இருந்தார்கள். அதனை அலாவுதீன் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான்.

இளவரசியும் அரண்மனையை விட்டு வெளியில் வந்தாள். தெரு வழியாக ஒய்யாரமாக நடந்து சென்று ஹம்மாவிற்குள் நுழைந்தாள் அப்போது தனது முகத்திரையை விலக்கினாள். அவ்விதம் விலக்கப்பட்ட சமயத்தில் அலாவுதீன் அவளது முகத்தைப் பார்த்தான். ஊரார் பலர் இளவரசியின் அழகைப் பற்றிக் கூறியது உண்மை என்பதை அவன் உணர்ந்தான்.

இப்படியாக அவள் ஹம்மாவிற்குள் நுழையும் வரை மறைந்திருந்து பார்த்துக் கொண்டு இருந்த அவன், பின்னர் தன்னை மறைத்துக் கொண்டான்.இளவரசியும் குளித்து முடித்து விட்டு அவ்விடத்தை விட்டு மீண்டும் அரண்மனையை அடைந்தாள். அப்படியே அலாவுதீனும் மெல்ல அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். தனது வீட்டையும் அடைந்தான்.

மேலும் இளவரசி பதர் அல்புதுரைப் பார்த்ததில் இருந்து அவள் நினைவாகவே இருந்தான் அலாவுதீன். அலாவுதீனின் தாயார் அவனை அழைப்பது கூட அவனது காதுகளில் கேட்கவில்லை. எப்போதுமே இளவரசியின் நினைவில் தான் அலாவுதீன் இருந்தான். தனது மகனுக்கு என்ன ஆனது என்று கலங்கித் தவித்தாள் அலாவுதீனின் தாயார்.

அலாவுதீனோ உணவு, உறக்கம் என அனைத்தையும் வெறுத்தான். சில சமயங்களில் தாயாரைக் கூட அவன் கண்டு கொள்ளவில்லை. ஆரம்பத்தில் அலாவுதீனுக்கு ஏதோ உடல் நிலை சரி இல்லை என்று நினைத்த அவனது தாயார் மருத்துவரை அழைத்து வந்து கூட பார்த்தாள். ஆனால், மருத்துவரோ அலாவுதீனுக்கு உடல் ரீதியாக ஒன்றும் இல்லை என்று கூறிச் சென்று விட்டார். அலாவுதீனின் தாய் இன்னும் குழம்பிப் போனாள். மகனுக்கு என்ன தான் ஆயிருக்கும் என்று மேலும், மேலும் யோசித்துக் கவலைப் பட்டாள்.