அரசியற் படலம் - 179
தசரதன் உலகைக் கருத்துடன் பாதுகாத்தல்
179.
‘எய்’ என எழு பகை எங்கும் இன்மையால்.
மொய் பொறாத் தினவு உறு முழவுத் தோளினான்.
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து. இனிது அரசு செய்கின்றான்.
எங்கும் எய்என எழுபகை இன்மையால்- (அம் மன்னனுக்கு)
எவ்விடத்திலும் விரைந்து எழுகின்ற பகைவர்கள் இல்லாமையால்;
மொய் பொறா தினவு உறு- போர்த் தொழிலே பெறாமையால் தினவு
கொண்டனவான; முழவுத் தோளினான்- மத்தளம் போன்ற திரண்ட
தோள்களை உடைய அவ்வரசன்; வையகம் முழுவதும் - உலகில்
வாழும் உயிர்கள் அனைத்தையும்; வறிஞன் ஓம்பும் ஓர் செய்என-
வறியவன் தனக்குள்ள ஒரே வயலைக் கண்ணும் கருத்துமாகப்
பாதுகாப்பது போல; காத்து. இனிது அரசுசெய்கின்றான்- பாதுகாத்து
இனிமையான ஆட்சிசெய்து வருகிறான்.
மொய்பெறா: போர் செய்தல் இல்லாமையால் தோள்கள் தினவுறுதல்
இயற்கை. தோளுக்கு ‘முழவு திரட்சியால் உவமை ஆயிற்று. பெறா:
பெறாத ஈறு கெட்ட எதிர் மறைப்பெயரெச்சம். ஓம்புதல்: காத்தல்; உறு
தோள்: வினைத்தொகை.
‘எய் என’ என்பதற்கு அம்புகளை எய்யுங்கள் என்று சொல்லும்படி
எழுகின்ற பகை எனவும் பொருள் கூறுவர்.
