அரசியற் படலம் - 178

bookmark

தசரதன் திகிரியின் சிறப்பு

178.

குன்றென உயரிய குவவுத் தோளினான்.
வென்றிஅம் திகிரி. வெம் பருதியாம் என.
ஒன்றென உலகிடை உலாவி. மீமிசை
நின்று. நின்று. உயிர்தொறும் நெடிது காக்குமே.
 
குன்று   என உயரிய - மலைபோலும் வளர்ந்து  ஓங்கிய; குவவுத்
தோளினான்-  திரண்ட தோள்கள்  கொண்ட தயரதனுடைய;  வென்றி
அம்திகிரி- வெற்றிமிக்க ஆணைச் சக்கரமானது; வெம்பரிதி  ஆம்என
-  வெம்மையுடைய  சூரியனோ  என்னும்படி;  மீமிசை  நின்று-  மிக
உயரமான    வானிலே    நின்றும்;    ஒன்று    என-   ஒன்றாகிய
பரம்பொருளைப்  போல; உலகிடை உயிர்தொறும் உலாவி   நின்று-
உலகில் வாழும் சர. அசரங்களாகிய உயிர்கள் தோறும் உலாவி.  நின்று;
நெடிது காக்கும்- பெரிதும் காத்தல் தொழிலைச் செய்யும்.

பரம்பொருள்     ஒன்றாக நின்று.  உயிர்தொறும்   உலாவி. நெடிது
காத்தல்  போல  வென்றியம்  திகிரி.  பரிதியாமென   நின்று  காக்கும்
என்பது  கருத்து.  குன்று:  தோளின்  திரட்சி   உயர்ச்சிவுண்மையாலும்
உவமையாகும்.  ‘ஒன்றென’  என்பதற்கு.  பொதுவறத்  தனித்தே நின்று
என. திகிரிக்கு ஏற்றிக் கூறினும் பொருந்தும்.

குன்றென.  பருதியாம் என. ஒன்று என. என்றுவரும் ‘என’  என்பன
உவமை உருபுகள். நெடிது: நீண்டகாலம் என்னும்  பொருளும்   கூறுதல்
பொருந்தும்.  குவவுத்  தோள்: திரண்டதோள்.  வெம்பருதி:  வெப்பமும்
ஒளியும்   தரும்  சூரியன்.  மீமிசை:   மிகமேலே   (மீமிசைச்  சொல்).
காக்குமே:   என்பதில்   ‘ஏ’   அசை.   பருதிஆம்:   பருதி   ஆகும்
(இடைக்குறை)