அரசியற் படலம் - 171
171.
தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்.
அன்னான் - மன்னர் மன்னனான அத்தயரதன்; எவர்க்கும்-
தனது ஆட்சிக் கடங்கியகுடிமக்கள் எவர்க்கும்; அன்பின்தாய்
ஒக்கும் -அன்பு செலுத்துவதில் பெற்ற தாயை ஒப்பவனாவான்; நலம்
பயப்பின் தவம் ஒக்கும் - நன்மை செய்வதில் தவத்தைப்
போன்றவனாவான்; முன்நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரான்-
தாய்தந்தையரின் கடைசிக் காலத்தில் முன்னே நின்று.
இறுதிச்சடங்குகளைச் செய்து அவர்களை நற்கதியில் சேரச் செய்யும்
தன்மையினால்; சேய் ஒக்கும் - அவர்கள் பெற்ற மகனை
ஒத்திருப்பான்; நோய் ஒக்கும்என்னின் - குடிமக்களுக்கு
நோய்வருமாயின்; மருந்து ஒக்கும் - அதைப் போக்கி. குணப்படுத்தும்
மருந்து போன்றவனுமாவான்; நுணங்கு கேள்வி ஆயப்புகுந்தால்-
நுணுக்கமான கல்வித்துறைகளை ஆராயப்புகும் போது; அறிவு
ஒக்கும்- நுட்பமான பொருளைக் காணும் அறிவினையும் ஒத்திருப்பான்.
தாயன்பு சிறந்தது. “தாயினும் சாலப்பரிந்து” என. இறையன்புக்கே
தாயன்பை உவமையாக கூறினர் மேலோர். தனது குடிமக்களிடம் தாய்
போல் அன்புடையவன். நன்மை புரிவதில் தவம் போன்றவன்;
நற்கதியடையச் செய்வதில் சேய் போன்றவன்; நோயுறும் காலை.
அதைப் போக்கும் மருந்து போன்றவன்; ஆராய்ச்சிக்கு உதவும்
அறிவு போன்றவன் என்றெல்லாம் தயரதனுடைய பண்பைச்
சிறப்பித்துக் கூறுகிறார். குருகுமாரனான சிரவணனுடைய
பெற்றோர்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து- அவர்களைச்
செல்கதி உய்த்த செயல் இவனது. “சேயொக்கும்” என்பது சிறப்பாகப்
பொருந்துவதொன்றுதானே! ‘அறிவு’ குணவாகு பெயராய்
அறிவுடையானை உணர்த்தி நின்றது. 4
